கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் அது பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் அது பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் அந்த வைரஸ் தொற்று மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து முக்கிய அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

அதுமட்டுமன்றி, சென்னை விமான நிலையத்தில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை ஒருபுறமிருக்க, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிரத்யேக சிகிச்சை வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவையான மருந்துகளும் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா என்றால் என்ன?: கரோனா வைரஸ் என்பது பாலூட்டி விலங்குகள் மற்றும் பறவைகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகையான நோய்த் தொற்றாகும். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல், மூச்சுக் காற்று, சளி, ரத்தம் மூலமாக பிறருக்கும் அந்த பாதிப்பு பரவ வாய்ப்புள்ளது. எனவே, கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும். ஒருவேளை அந்த நோய்க்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளாதபட்சத்தில் தீவிர சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடக்கூடும்.  

சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். 1,287 பேர் இந்த வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 237 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், இந்தியாவில் அந்த வைரஸ் பரவாமல் இருக்க சீனாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் விமான நிலையங்களிலேயே மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், சென்னை விமான நிலையத்திலும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது: கரோனா வைரஸ் தாக்கம் குறித்து அச்சப்படத் தேவையில்லை. அது மிகச் சாதாரணமான ஒரு பாதிப்புதான். உரிய விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கையும் இருந்தால், அந்தநோய் வராமல் நம்மை காத்துக் கொள்ள முடியும்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை. இருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com