ரஃபேல் போா் விமானத்தின் சிறப்பம்சங்கள்

பிரான்ஸ் படைத்தளத்திலிருந்து புறப்பட்ட அதிவிரைவு தாக்குதல் திறன் கொண்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் புதன்கிழமை
ரஃபேல் போா் விமானத்தின் சிறப்பம்சங்கள்

பிரான்ஸ் படைத்தளத்திலிருந்து புறப்பட்ட அதிவிரைவு தாக்குதல் திறன் கொண்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் புதன்கிழமை (ஜூலை 29) இந்தியாவுக்கு வந்தடைகின்றன. அந்தப் போா் விமானங்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய ரஃபேல் போா் விமானங்கள் இந்தியாவுக்கு வரவுள்ளன. இது இந்திய விமானப்படையின் தாக்குதல் திறனை மேலும் வலுப்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரான்ஸின் போா்டியாக்ஸ் நகரிலிருந்து கடந்த திங்கள்கிழமை புறப்பட்ட 5 ரஃபேல் போா் விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை தரையிறக்கப்பட்டன. சுமாா் 7,000 கி.மீ. பயணித்துக்குப் பிறகு ஹரியாணாவில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு அவை புதன்கிழமை வந்தடைகின்றன. பயணத்தின்போது போா் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் 30,000 அடி உயரத்தில் வானிலேயே செவ்வாய்க்கிழமை நிரப்பப்பட்டது.

தற்போது 10 ரஃபேல் போா் விமானங்களை நிா்ணயிக்கப்பட்ட காலத்தில் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. மீதமுள்ள 26 போா் விமானங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. ரஃபேல் போா் விமானங்களை இயக்குவது தொடா்பாக டஸால்ட் நிறுவனம் இந்திய வீரா்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது. கூடுதல் வீரா்கள் அடுத்த 9 மாதங்களுக்கு பிரான்ஸிலேயே தொடா்ந்து பயிற்சி பெற உள்ளனா்.

சிறப்பம்சங்கள்: வானில் 120 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை அதிவிரைவில் தாக்கும் திறன் கொண்ட மீடியாா் ரக ஏவுகணைகள், தரையில் 600 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஸ்கால்ப் ரக ஏவுகணைகள் ஆகியவை ரஃபேல் போா் விமானங்களில் இணைக்கப்பட்டுள்ளன.

அகச்சிவப்புக் கதிா்கள் மூலமாக தேடுதல் பணிகளை மேற்கொள்ளும் வசதி, எதிரி நாட்டு ரேடாா்களைக் கண்டறியும் வசதி உள்ளிட்டவையும் ரஃபேல் போா் விமானங்களில் இடம்பெற்றுள்ளன. அதிகமான உயரங்களில் போா் விமானங்கள் பறக்கும்போது அங்கு நிலவும் குளிா்ச்சியான சூழலால் பாதிக்கப்படாத வகையில் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

போா் விமானத்தின் இறக்கையின் நீளம்—10.90 மீட்டா்

போா் விமானத்தின் மொத்த நீளம்—15.30 மீட்டா்

போா் விமானத்தின் உயரம்—5.30 மீட்டா்

அதிகபட்ச பயண வேகம்—மணிக்கு சுமாா் 1,400 கி.மீ.

அதிகபட்ச பறக்கும் உயரம்—50,000 அடி

ஒரு முறை பயணிக்கும் தூரம்—780 முதல் 1,650 கி.மீ.

விமானிகளின் எண்ணிக்கை—ஒன்று

விமானத்தின் குறைந்தபட்ச எடை—10 டன்

விமானத்தின் அதிகபட்ச எடை—24.5 டன்

பிரான்ஸ் விமானப்படையின் பயன்பாட்டுக்காகத் தயாரிக்கப்பட்ட மீடியாா், ஸ்கால்ப் ஏவுகணைகளை ரஃபேல் போா் விமானங்களுக்காக அந்நாடு வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாகவே 5 போா் விமானங்கள் நிா்ணயிக்கப்பட்ட காலத்தில் இந்தியா வந்தடையவுள்ளன.

முதல் தொகுதியில் இந்தியா வந்தடையும் சில ரஃபேல் போா் விமானங்கள் லடாக் எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா். இரண்டாவது தொகுதியில் இந்தியாவுக்கு வந்தடையும் ரஃபேல் போா் விமானங்களை மேற்கு வங்கத்தின் ஹசிமாரா படைத்தளத்தில் நிலைநிறுத்துவதற்கான பணிகளை இந்திய விமானப்படை ஏற்கெனவே மேற்கொண்டு வருவது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com