லேசான அறிகுறி, அறிகுறி இல்லாதவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டாம்: தில்லி அரசு

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அவர்களுக்கு லேசான அறிகுறி இருந்தாலோ அல்லது அறிகுறியே இல்லாவிட்டாலோ அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டாம் என்று தில்லி நல்வாழ்வுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
லேசான அறிகுறி, அறிகுறி இல்லாதவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டாம்: தில்லி அரசு


புது தில்லி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அவர்களுக்கு லேசான அறிகுறி இருந்தாலோ அல்லது அறிகுறியே இல்லாவிட்டாலோ அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டாம் என்று தில்லி நல்வாழ்வுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை முறை குறித்து மத்திய அரசு வெளியிட்ட விதிமுறைகளை அடிப்படையாக வைத்து, தில்லி நல்வாழ்வுத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, கரோனா பாதித்தவர்களை விரைவாகக் கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். கரோனா நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவமனையில் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதும் முக்கியத்துவம் பெறுகிறது.

கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்பட்டு, தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது, துரித சிகிச்சைமுறையை உறுதி செய்ய உதவும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கரோனா உறுதி செய்யப்பட்ட ஆனால் லேசான அறிகுறி அல்லது அறிகுறி இல்லாத  நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், கரோனா பாதித்து அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறியோடு இருப்பவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது அவசியம் இல்லை. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தலாம். அதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கும்பட்சத்தில் அவர்களை அரசின் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைப்பது அல்லது கரோனா பாதுகாப்பு மையம் அல்லது கரோனா மருத்துவமனை வளாகத்தில் உள்ள மையங்களில் தங்க வைக்கலாம்.

அதே சமயம், அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி இருப்பவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும்பட்சத்தில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிக்கு தகவல் அளித்துவிட்டு, 24 மணி நேரத்தில் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று புது தில்லியின் நல்வாழ்வுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com