லடாக்கில் பதற்றம்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

லடாக்கில் இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டு பதற்றம் உருவாகியுள்ள நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
லடாக்கில் பதற்றம்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை


புது தில்லி: லடாக்கில் இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டு பதற்றம் உருவாகியுள்ள நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், ராணுவ, கடற்படை மற்றும் விமானப் படை தளபதிகள் மற்றும் இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கிழக்கு லடாக்கில் தற்போது சூழ்நிலை குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டிருந்தது.

இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் குவிக்கப்பட்டிருந்த இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின் போது மோதல் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

சீன ராணுவத்துடனான மோதலின் போது துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாகவும், இந்த தாக்குதலில் இந்திய ராணுவ உயர் அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். உடனடியாக ராணுவ உயர் அதிகாரிகள் தலையிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி நிலையை சுமூகமாக்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.

லடாக் எல்லைப் பகுதியில் படைகளை திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா - சீனா இடையே ராணுவ நிலையிலான பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வந்தது. படைப் பிரிவின் தளபதிகள் நிலையிலான இந்த பேச்சுவாா்த்தை கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், இந்த மோதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

லடாக் எல்லையில் கடந்த பல வாரங்களாக இந்தியா-சீனா இடையே பதற்றம் நீடித்து வந்த நிலையில், பேச்சுவாா்த்தையை அடுத்து இரு நாட்டு ராணுவங்களும் தனது படைகளை திரும்பப் பெறத் தொடங்கின.

கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற ராணுவ துணைத் தளபதிகள் அளவிலான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கக் கூடிய வகையிலான எந்தவொரு நடவடிக்கையிலும் இந்திய, சீன ராணுவங்கள் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு இரு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இந்திய ராணுவ தரப்பில் உயிர் இழப்புகளும் நேரிட்டுள்ளன.

இந்திய - சீன ராணுவங்கள் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின் போது இந்த மோதல் நடைபெற்றதாக முதற்கட்ட தகவலை இந்திய ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com