பிரதமர் நல நிதியில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்பில் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பு: பிரதமர் அலுவலகம் தகவல்

பிரதமர் நல நிதியில் இருந்து ரூ. 2 ஆயிரம் கோடி செலவில் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமர் நல நிதியில் இருந்து ரூ. 2 ஆயிரம் கோடி செலவில் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், கரோனா தடுப்புப் பணிகளுக்காக பிரதமர் நல நிதி உருவாக்கப்பட்டது. தொழிலபதிபர்கள், பிரபலங்கள், தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற நிதியை அளிக்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், பி.எம்.கேர்ஸ் எனும் பிரதமர் நல நிதி எதற்காக பயன்படுத்தப்படுகிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க முடியாது என பிரதமர் அலுவலகம் கூறிய நிலையில் கடும் சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து,  பிரதமர் அலுவலகத் தரப்பில் இருந்து பிரதமர் நல நிதி செலவின விவரங்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, இந்தியாவில் 50,000 வென்டிலேட்டர்கள் உருவாக்க பிரதமர் நல நிதியில் இருந்து ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ஏற்கெனவே 2,923 வென்டிலேட்டர்கள் உருவாக்கப்பட்டு 1,340 வென்டிலேட்டர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் மகாராஷ்டிரத்துக்கு 275, தில்லிக்கு 275, குஜராத் 175, பிகாருக்கு 100, கர்நாடகத்துக்கு 90, ராஜஸ்தான் மாநிலத்துக்கு 75 என வழங்கப்பட்டுள்ளன. ஜூன் மாத இறுதியில் மேலும் 14,000 வென்டிலேட்டர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளன. 

மொத்தமாக 50,000 வென்டிலேட்டர்கள் தயாரிப்பில் 30,000 வென்டிலேட்டர்கள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. இதர 20,000 வென்டிலேட்டர்கள் தயாரிப்பு பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், மகாராஷ்டிரம், பிகார், குஜராத், மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com