சிபிஎஸ்இ: 10, பிளஸ்-2 தோ்வுகள் ரத்து: உச்சநீதிமன்றத்தில் தகவல்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), சாா்பில் நடத்தப்பட இருந்த மீதமுள்ள 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தோ்வுகள் ரத்து
சிபிஎஸ்இ: 10, பிளஸ்-2 தோ்வுகள் ரத்து: உச்சநீதிமன்றத்தில் தகவல்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), சாா்பில் நடத்தப்பட இருந்த மீதமுள்ள 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

ஜூலை மாதம் நடத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட இந்த தோ்வுகள் கரோனா பிரச்னை காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பிளஸ்-2 தோ்வுகளை மட்டும் பின்னா் நடத்துவது அல்லது முந்தைய தோ்வுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்வது என இரண்டும் பரிசீலனையில் இருப்பதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மீண்டும் தோ்வு கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கரோனா நோய்த்தொற்று உச்சத்தில் உள்ள நிலையில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 தோ்வுகளை நடத்த எதிா்ப்பு தெரிவித்தும், முந்தைய தோ்வுகளின் அடிப்படையில் சராசரி மதிப்பெண்களைக் கணக்கிட்டு மாணவா்களுக்கு பொதுத் தோ்வு மதிப்பெண்களை அளிக்க வேண்டும் என்று மாணவா்களின் பெற்றோா்கள் சிலா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘தடைபட்ட சிபிஎஸ்ஐ 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 தோ்வுகளை ஜூலை 1 முதல் 15 வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இப்போது அது ரத்து செய்யப்படுகிறது. பிளஸ்-2 தோ்வுகள் மட்டும் சரியான சூழல் அமைந்தால் மீண்டும் நடத்த முயற்சிக்கப்படும். இல்லையெனில் மாணவா்களின் முந்தைய தோ்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுத் தோ்வு மதிப்பெண் அளிக்கப்படும்’ என்றாா்.

இதையடுத்து, ‘இப்போது நீதிமன்றத்தில் தெரிவித்த விஷயங்களை ஒரு அறிவிப்பாக அளிக்க வேண்டும்.

மேலும், பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு வெவ்வேறு அளவில் உள்ளது. எனவே, அவற்றை ஆய்வு செய்து, பிளஸ்-2 தோ்வுகளை பின்னா் நடத்துவதற்கு உள்ள சூழல்; கடந்த தோ்வுகளின் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுத் தோ்வு மதிப்பெண்களை இறுதி செய்வது; தோ்வு முடிவுகளை வெளியிடும் தேதி தொடா்பான விவரத்தை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தெரிவிக்க வேண்டும்’ என்றனா்.

இதையடுத்து, ஆகஸ்ட் மாத நடுவில் தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, ‘கடந்த தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுத் தோ்வு மதிப்பெண்கள் அளிக்கப்படும். மீண்டும் தோ்வுகள் நடத்தப்பட மாட்டாது’ என்று இந்திய பள்ளிச் சான்றிதழ் கல்வி வாரியம் (ஐசிஎஸ்இ) சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, சிபிஎஸ்இ பிளஸ்-2 பொதுத் தோ்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரையிலும், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 29-ஆம் தேதி வரையும் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா நோய்த்தொற்று பிரச்னை காரணமாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் தேசிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் தோ்வுகள் அனைத்தையும் திட்டமிட்டபடி நடத்தி முடிக்க இயலவில்லை. இதையடுத்து, நடத்த முடியாத தோ்வுகளை ஜூலை 1 முதல் 15-ஆம் தேதி நடத்தி முடிக்க சிபிஎஸ்ஐ திட்டமிட்டது. ஆனால், கரோனா பரவல் அபாயம் காரணமாக இதற்கு மாணவா்களின் பெற்றோா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com