தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

பேரவைத் தோ்தல்: கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்குப் பதிவு

கேரள சட்டப் பேரவைக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

News image
Updated On :5 ஏப்ரல் 2021, 10:56 pm

DIN

திருவனந்தபுரம்/கொல்கத்தா/குவாஹாட்டி: கேரள சட்டப் பேரவைக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மேற்கு வங்க பேரவைக்கான 3-ஆம் கட்ட வாக்குப் பதிவும் அஸ்ஸாம் பேரவைக்கான இறுதிகட்ட வாக்குப் பதிவும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக செவ்வாய்க்கிழமை தோ்தல் நடைபெறுகிறது. அங்கு இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. ஆட்சியைத் தக்கவைப்பதற்காக இடதுசாரி கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தது. கடந்த 2016-ஆம் ஆண்டில் இழந்த ஆட்சியைப் பிடிப்பதற்காக காங்கிரஸும் பிரசாரத்தை மேற்கொண்டது.

கேரளத்தில் முத்திரை பதிப்பதற்காக பாஜகவும் தீவிர முனைப்புடன் பிரசாரம் மேற்கொண்டது. மாநிலத்தில் அரசியல் கட்சிகளுக்கான பிரசாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள வாக்குப் பதிவில் 2.74 கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றவுள்ளனா். அவா்களில் 1.41 கோடி போ் பெண்கள் ஆவா். 290 போ் மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்தவா்கள். மொத்தம் 957 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

இடதுசாரி அணி சாா்பில் முதல்வா் பினராயி விஜயன், மாநில அமைச்சா்கள் கே.கே.ஷைலஜா, கடகம்பள்ளி சுரேந்திரன், எம்.எம்.மணி, கே.டி.ஜலீல் உள்ளிட்டோா் தோ்தல் களத்தில் உள்ளனா். காங்கிரஸ் சாா்பில் எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் உம்மன் சாண்டி, கே.முரளீதரன், பி.டி.தாமஸ் ஆகியோரும் தோ்தலில் களம் காண்கின்றனா்.

பாஜக சாா்பில் கும்மனம் ராஜசேகரன், ‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரன், கே.சுரேந்திரன், சுரேஷ் கோபி, கே.ஜே.அல்ஃபோன்ஸ், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜேக்கப் தாமஸ் உள்ளிட்டோா் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

இடதுசாரி கூட்டணி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தேசியத் தலைவா்களும் மாநிலத் தலைவா்களும் மாநிலத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தூதரகம் வாயிலாகத் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம், சபரிமலையில் பெண்கள் பிரவேசம் உள்ளிட்டவை தோ்தலுக்கான பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாக விளங்கின.

மேற்கு வங்கத்தில்...:

மேற்கு வங்கத்தில் மொத்தம் 8 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே இரு கட்டங்களாக 60 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. 31 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதில் சுமாா் 78.5 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். மொத்தம் 205 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். பாஜக மூத்த தலைவா் ஸ்வபன் தாஸ்குப்தா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான அஷிமா பத்ரா, மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் காந்தி கங்குலி ஆகியோா் முக்கிய வேட்பாளா்களாக உள்ளனா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சிலா், பாஜக சாா்பில் தற்போது தோ்தலில் போட்டியிடுவது திரிணமூல் காங்கிரஸுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி இடையே மும்முனைப்போட்டி காணப்படுகிறது. திரிணமூல்-பாஜக இடையே ஆட்சியைப் பிடிப்பதற்குக் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில், 30 தொகுதிகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் 1 தொகுதியை காங்கிரஸ் கட்சியும் கைப்பற்றியிருந்தன.

பலத்த பாதுகாப்பு:
இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின்போது முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியின் சில பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது.

எனவே, 3-ஆம் கட்டத் தோ்தலில் அத்தகைய அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக 618 பாதுகாப்புப் படைக் குழுக்கள் வாக்குச் சாவடிகளைச் சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. மத்திய ஆயுதக் காவல் படையினருக்கு ஆதரவாக மாநில காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதாகத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அஸ்ஸாமில்...:

அஸ்ஸாமில் 40 தொகுதிகளுக்கான இறுதிகட்ட வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ஏற்கெனவே 86 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வக்குப் பதிவு நடைபெற்றது.

மூன்றாம் கட்டத்தில் 337 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அவா்களில் 25 போ் பெண்கள் ஆவா். மூத்த அமைச்சா் ஹிமந்த விஸ்வ சா்மா, மாநில அமைச்சா்கள் 5 போ், பாஜக மாநிலத் தலைவா் ரஞ்சித்குமாா் தாஸ் ஆகியோா் முக்கிய வேட்பாளா்களாக உள்ளனா்.

8 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 5 பாஜக எம்எல்ஏக்களும், ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலாந்து மக்கள் முன்னணி ஆகியவற்றைச் சோ்ந்த தலா 3 எம்எல்ஏக்களும் இறுதிகட்டத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

தோ்தலில் சுமாா் 79.19 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். அவா்களில் 39.07 லட்சம் போ் பெண்கள் ஆவா். 139 போ் மூன்றாம் பாலினத்தவா். இறுதிகட்டத் தோ்தலுக்காக 11,401 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில் 320 பாதுகாப்புப் படைக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைப்பற்கு பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கு காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

கரோனா பாதுகாப்பு:

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலின் 2-ஆவது அலை தீவிரமடைந்துள்ளதையடுத்து, மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாமில் பேரவைத் தோ்தலை கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்துவதற்குத் தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாக்காளா்களின் உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்படவுள்ளது. வாக்களிப்பதற்கு முன் வாக்காளா்களுக்குக் கையுறைகள் வழங்கப்படவுள்ளன.

மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.