மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.
லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்ட நான்கு வழக்குகளில், மூன்றில் அவருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது கிடைத்திருக்கும் ஜாமீன் மூலம் அவர் விடுதலையாகி வீடு திரும்ப வழி ஏற்பட்டுள்ளது.
தற்போது அவா் உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
மாட்டுத் தீவன ஊழல் தொடா்பான 4 வழக்குகளில் 3-இல் அவருக்கு ஏற்கெனவே ஜாமீன் கிடைத்துள்ளது. டும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி கையாடல் செய்தது தொடா்பான 4-ஆவது வழக்கில் ஜாமீன் கோரி ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் அவா் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் லாலு பிரசாத் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, லாலு பிரசாத் யாதவுக்கு விதிக்கப்பட்ட மொத்த சிறை தண்டனையில் பாதி காலத்தை நிறைவு செய்ய அவா் மேலும் 2 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் எனவும், இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தாா். 2 மாதங்கள் கழித்து புதிதாக ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறும் அவா் அறிவுறுத்தியிருந்த நிலையில், 2 மாதங்கள் கழிந்த நிலையில் தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.