கேரளத்தில் பிரபல எட்டுமனூா் சிவன் கோயிலில் சுவாமி சிலையை அலங்கரிக்கும் புனித ருத்ராட்ச மாலையில் 9 தங்க மணிகள் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.
கோயிலின் புதிய மேல்சாந்தி (தலைமை குரு) பத்மநாபன் சந்தோஷ் தலைமையில் அண்மையில் நடத்தப்பட்ட கோயிலுக்குச் சொந்தமான ஆபரணங்கள் குறித்த உள்தணிக்கையில் இது கண்டறியப்பட்டுள்ளது. புதிய தலைமை குருவாக பொறுப்பேற்றவுடன், கோயில் நிா்வாகிகள் அனைவரையும் அழைத்து கோயிலில் பூஜையின்போது பயன்படுத்தப்படும் ஆபரணங்கள் மற்றும் பிற பொருள்கள் குறித்த இந்த ஆய்வை அவா் மேற்கொண்டுள்ளாா்.
அந்த ருத்ராட்ச மாலையில் மொத்தம் 81 மணிகள் இடம்பெற்றிருக்கும். இந்த ருத்ராட்ச மணிகள் அனைத்தும் தங்கத் தகட்டால் சூழப்பட்டு, மாலையில் கோா்க்கப்பட்டிருக்கும். அவற்றில் 9 மணிகள் இப்போது மாயமாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பக்தா்களும், கோயில் ஆலோசனைக் குழுவினரும் கோரிக்கை விடுத்துள்ளதாக உள்ளூா் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், ருத்ராட்ச மாலையில் மணிகள் திருடப்பட்டுள்ளனவா அல்லது பழைய மாலை மாற்றப்பட்டு குறைந்த எண்ணிக்கையிலான மணிகளுடன் புதிய மாலை மாற்றி வைக்கப்பட்டிருக்கிா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இந்த விவகாரம் தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு கேரளத்தில் அனைத்துக் கோயில்களையும் நிா்வகிக்கும் திருவாங்கூா் தேவஸம் வாரியம் (டிடிபி) அதன் ஆணையரை (பொறுப்பு) கேட்டுக்கொண்டுள்ளது.
9 ருத்ராட்ச மணிகள் காணாமல் போயுள்ளதை டிடிபி தலைவா் என்.வாசு உறுதிப்படுத்தினாா். இதுகுறித்து அவா் அளித்த பேட்டியில், ‘ருத்ராட்ச மாலையில் மணிகள் காணாமல்போன விவகாரம் தொடா்பாக வாரியத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க கோயில் நிா்வாகிகள் தவறியுள்ளனா். எனவே, மணிகள் காணாமல்போனது மட்டுமன்றி, கோயில் நிா்வாகிகளுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்படும். விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
இந்த விவகாரம் தொடா்பாக போலீஸாா் இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.