சிறைக்குச் செல்ல ஆசையா? வெறும் 500 ரூபாய் இருந்தால் போதும்!

சிறைச்சாலைக்குச் சென்று ஒரே ஒரு நாள் அங்குள்ள வாழ்க்கை முறையைப் பார்த்துவிட்டு வர வேண்டும் என்று விருப்பமா? நீதிமன்றத்துக்கு எல்லாம் செல்ல வேண்டாம்.. வெறும் 500 ரூபாய் இருந்தால் போதும்.
சிறைக்குச் செல்ல ஆசையா? வெறும் 500 ரூபாய் இருந்தால் போதும்!
சிறைக்குச் செல்ல ஆசையா? வெறும் 500 ரூபாய் இருந்தால் போதும்!


பெலகாவி: சிறைச்சாலைக்குச் சென்று ஒரே ஒரு நாள் அங்குள்ள வாழ்க்கை முறையைப் பார்த்துவிட்டு வர வேண்டும் என்று விருப்பமா? நீதிமன்றத்துக்கு எல்லாம் செல்ல வேண்டாம்.. வெறும் 500 ரூபாய் இருந்தால் போதும்.

ஊட்டி, கொலைக்கானல், மூணாறு என சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது போல, ஒரே ஒரு நாள் சிறைக்குப் போக வேண்டும், அங்கு எப்படித்தான் இருக்கும் என்று நேரில் பார்த்துவிட வேண்டும் என்று பலருக்கும் விருப்பம் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் அதற்காக கொலை, கொள்ளையில் ஈடுபட்டு நீதிமன்றத்தின் படியேறவா முடியும்? என்று கேட்பவர்களுக்காகவே வந்துவிட்டது ஒரு புதிய திட்டம்.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா மத்திய சிறைச்சாலை அதிகாரிகள், பொதுமக்களுக்கு, சிறைவாழ்க்கை என்பது எவ்வாறு இருக்கும் என்று அறிய ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, ஒரு நாள் முழுக்க சிறைச்சாலையில் இருந்துவிட்டு வர ஒருவருக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை அமல்படுத்த, தற்போது அரசு உத்தரவுக்காக சிறை நிர்வாகம் காத்திருக்கிறது. அரசு ஒப்புதல் அளித்தால், "நான் ஜெயிக்குப் போறேன்.. ஜெயிலுக்குப் போறேன்" என்று வடிவேலு பாணியில் சென்றுவிட்டு வரலாம்.

இந்த திட்டம் குறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், சிறைக்கு வரும் பார்வையாளர்கள், இதர சிறைக்கைதிகளைப் போலவே நடத்தப்படுவார்கள். காலையில் எழுந்தது முதல் சிறைக்கைதிகள் என்னென்ன செய்வார்களோ அதையே பார்வையாளர்களும் செய்ய வேண்டும். இதில் மிகவும் சுவாரஸ்யம் என்னவென்றால், பார்வையாளர்களுக்கும் சிறைக் கைதிகளுக்கான ஆடை மற்றும் கைதி எண்ணும் வழங்கப்பட்டு, அவர்கள் பிற கைதிகளுடன் சிறை அறையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சிறைக் கைதிகளுடன் இணைந்து அவர்களுக்கான உணவைதான் உண்ண வேண்டும், அவர்களுடன் சேர்ந்து தோட்ட பராமரிப்பு, சமையல் செய்வது, தூய்மைப்பணிகளையும் பார்வையாளர்கள் செய்ய வேண்டும்.

அதாவது, சிறைவார்டன், சிறையில் இருக்கும் அனைவரையும் காலை 5 மணிக்கு எழுப்பிவிடுவார். காலையில் தேநீர் அருந்துவதற்கு முன்பு, சிறை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பிறகுதான் தேநீர் வழங்கப்படும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு காலை உணவு வழங்கப்படும். 11 மணிக்கு சாதம் மற்றும் சாம்பார் மதிய உணவாக வழங்கப்படும். பிறகு இரவு 7 மணிக்கு உணவளிக்கப்படும். வாரத்தில் ஒரு முறை அல்லது இருமுறை சிறைக் கைதிகளுக்கு அசைவ உணவு வழங்கப்படும். ஒரு வேளை பார்வையாளர்கள் வார இறுதி நாள்களில் சிறைக்கு வந்து தங்கினால், அவர்களுக்கும் அந்த சிறப்பு உணவை சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

அன்றைய பணிகள் முடிந்ததும், இரவில் பார்வையாளர்கள் தங்களுக்கான பாயை வாங்கிக் கொண்டு பிற கைதிகளுடன் தரையில் படுத்து உறங்க வேண்டும். அதுமட்டுமல்ல, அவர்கள் தங்கியிருக்கும் சிறை அறையும் மற்ற சிறை அறைகள் போல பூட்டப்படும்.

யாருக்குத் தெரியும், இந்த சிறைச் சுற்றுலாவின் போது மிக பயங்கர கைதிகளுடன் கூட நாம் தங்க நேரிடலாம். இந்த சிறையில் தொடர் கொலைக் குற்றவாளிகள், பலாத்காரக் குற்றவாளி உமேஷ் ரெட்டி உள்பட சுமார் 29 கைதிகள் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள். 

இந்த திட்டத்தின் மூலம், சிறை வாழ்க்கையை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதோடு, குற்றங்களில் ஈடுபடும் மனநிலை மாறலாம் என்றும் சிறை அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com