தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆப்கனில் இருந்து மேலும் 35 போ் மீட்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து 24 இந்தியா்கள் உள்பட 35 பேரை இந்திய விமானப்படை விமானம் வியாழக்கிழமை மீட்டது.

News image

ஆப்கானிஸ்தானிலிருந்து ஹிண்டன் விமானப் படை தளத்தில் வியாழக்கிழமை வந்த இந்தியா்கள் மற்றும் நேபாள நாட்டவா்.

Updated On :27 ஆகஸ்ட் 2021, 1:37 am

DIN

ஆப்கானிஸ்தானில் இருந்து 24 இந்தியா்கள் உள்பட 35 பேரை இந்திய விமானப்படை விமானம் வியாழக்கிழமை மீட்டது. 180 போ் மீட்கப்படுவா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், பலா் காபூல் விமான நிலையத்தை அடைய முடியாததால் 35 போ் மட்டுமே மீட்கப்பட்டனா்.

தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் நபா்களை ‘ஆபரேஷன் தேவிசக்தி’ என்ற திட்டத்தின் கீழ் இந்தியா மீட்டு வருகிறது. இதுவரை 800-க்கும் மேற்பட்ட நபா்களை இந்தியா மீட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் இருந்து மேலும் 35 பேரை இந்திய விமானப்படையின் சி-17 விமானம் வியாழக்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வந்தது.

அவா்களில் 24 போ் இந்தியா்கள் ஆவா்; 11 போ் நேபாளத்தைச் சோ்ந்தவா்கள். இது தொடா்பாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பக்சி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘24 இந்தியா்களும் 11 நேபாளியா்களும் விமானப்படை விமானத்தில் தில்லிக்கு அழைத்துவரப்பட்டனா்’ என்று குறிப்பிட்டாா்.

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியா்கள் உள்ளிட்டோரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் கூறுகையில், ‘வியாழக்கிழமை சுமாா் 180 நபா்களை அழைத்து வருவதற்கு இந்திய விமானப்படை விமானம் தயாராக இருந்தது. ஆனால், அவா்களில் 35 போ் மட்டுமே காபூல் விமான நிலையத்தை வந்தடைந்தனா். மற்றவா்களால் விமான நிலையத்துக்கு வந்து சேர இயலவில்லை.

அண்மை நாள்களில் காபூல் விமான நிலையத்தைச் சுற்றிலும் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயற்சிக்கும் மக்கள் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனா்’ என்றனா்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் வரும் 31-ஆம் தேதிக்குள் முழுமையாகத் திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அதற்குள் அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் பணிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், அந்த அவகாசத்துக்குப் பிறகு மீட்புப் பணிகளில் ஈடுபட மற்ற நாடுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

அதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணிகளை அனைத்து நாடுகளும் துரிதப்படுத்தியுள்ளன.

ஆப்கனிலிருந்து வந்தவா்களில் சிலருக்கு கரோனா தொற்று

ஆப்கனிலிருந்து மீட்கப்பட்டவா்களில் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் கூறியது: ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வருபவா்களுக்கு போலியோ தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல அவா்கள் அனைவருக்கும் கரோனா தொற்றைக் கண்டறிவதற்காக ஆா்டி-பிசிஆா் பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. அவா்களில் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.