கோட்டைக்கு திரும்பும் ராகுல் காந்தி; தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பாக ராஜஸ்தானில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேசம் அமேதியில் பேரணி நடைபெறவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்டுவந்த உத்தரப் பிரதேசம் மாநில அமேதியில் காங்கிரஸ் சார்பாக இன்று பேரணி நடைபெறவுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே, அமேதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ்தான் வெற்றிவாடை சூடிவந்தது. குறிப்பாக, நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் இங்கு போட்டியிட்டுவருகின்றனர்.

இச்சூழலில், கடந்த 2019 தேர்தலில், பாஜக சார்பாக போட்டியிட்ட ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியை தோற்கடித்து வெற்றிபெற்றார். இந்தநிலையில், தனது சொந்த தொகுதிக்கு ராகுல் காந்தி திரும்பவுள்ளார்.

விலைவாசி உயர்வை கண்டித்து அமேதியில் நடைபெறவுள்ள பேரணியில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் உத்தரப் பிரதேச பொறுப்பாளருமான பிரியங்கா காந்தியும் கலந்து கொள்ளவுள்ளார். மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பாக ராஜஸ்தானில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், அமேதியில் பேரணி நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "இந்து என்றால் யார்? எல்லா மதத்தையும் மதித்து யாருக்கும் பயப்படாதவர். அதிகாரத்தில் இருப்பவர்கள் போலி இந்துக்கள். இந்தியாவில் இந்துத்துவவாதி ராஜ்ஜியம் நடைபெற்றுவருகிறது. இந்து ராஜ்ஜியம் அல்ல. இந்துத்துவவாதிகளை அகற்றிவிட்டு இந்து ராஜ்ஜியத்தை கொண்டு வர விரும்புகிறோம்" என்றார்.

கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து, காங்கிரஸ் பல்வேறு விதமான பின்னடைவுகளை சந்தித்தவருகிறது. இதற்கு மத்தியில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அனைத்து விதமான முயற்சிகளையும் அக்கட்சி மேற்கொண்டுவருகிறது. கடந்த 2019 தேர்தலில், 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வி அடைந்த பிறகு, இரண்டாவது முறையாக அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி செல்கிறார்.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 40 சதவிகித தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என பிரியங்கா காந்தி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com