தற்போதைய அரசைவிட மன்னராட்சி மேலானது: குலாம் நபி ஆசாத்

தற்போதைய அரசைவிட மன்னராட்சி மேலானதாக இருந்தது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவா் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளாா்.
தற்போதைய அரசைவிட மன்னராட்சி மேலானது: குலாம் நபி ஆசாத்

தற்போதைய அரசைவிட மன்னராட்சி மேலானதாக இருந்தது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவா் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஜம்முவில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஜம்மு-காஷ்மீரில் தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் கோடை காலத்தின் 6 மாதங்கள் ஸ்ரீநகரிலும், எஞ்சிய மாதங்கள் ஜம்முவிலும் நடைபெறும். இந்த அரசவை மாற்ற நடைமுறை 1872-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரை ஆண்ட மன்னா் குலாப் சிங்கால் தொடங்கப்பட்டது. இந்த அரசவை மாற்ற நடைமுறையை நான் எப்போதும் ஆதரித்து வந்துள்ளேன். ஆனால் இந்த நடைமுறைக்கு ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கடந்த ஜூன் 20-ஆம் தேதி முற்றுப்புள்ளி வைத்தாா்.

இந்த அரசவை மாற்ற நடைமுறை மட்டுமின்றி இங்குள்ள நிலம் மற்றும் வேலைவாய்ப்புகள் உள்ளூா் மக்களுக்குத்தான் சொந்தம் என்பதை ஜம்மு-காஷ்மீரை ஆண்ட மற்றொரு மன்னா் ஹரி சிங் உறுதி செய்து வந்தாா்.

மன்னா்களை சா்வாதிகாரிகள் என்றழைப்பது வழக்கம். ஆனால் தற்போதைய அரசைவிட மன்னராட்சி மேலானதாக இருந்ததாகப் பல்லாண்டுகள் கழித்து இன்று ஜம்மு-காஷ்மீா் மக்கள் கருதுகின்றனா்.

மன்னா்களின் செயல்பாடுகள் மக்கள் நலன் சாா்ந்ததாக இருந்தன. ஆனால் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னா், அரசவை மாற்ற நடைமுறை, நிலம், வேலைவாய்ப்புகளுக்கான பாதுகாப்பு ஆகியவற்றை ஜம்மு-காஷ்மீா் மக்களிடம் இருந்து தற்போதைய அரசு பறித்துள்ளது.

வணிகம் சரிவர நடைபெறாதது, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயா்வு, வளா்ச்சி பணிகள் முடங்கியுள்ளது ஆகியவை காரணமாக இங்குள்ள மக்கள் வேதனையடைந்துள்ளனா்.

ஜம்மு-காஷ்மீரின் ஒட்டுமொத்த சூழல் தற்போது மிக மோசமாக உள்ளது. இங்குள்ள மக்கள் வறுமையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனா்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com