நீதி ஆயோக் சுகாதாரக் குறியீட்டில் கேரளம் முதலிடம்

நீதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரக் குறியீட்டில் கேரளம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்தப் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாமிடத்தையும், உத்தர பிரதேசம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.
நீதி ஆயோக் சுகாதாரக் குறியீட்டில் கேரளம் முதலிடம்

புது தில்லி: நீதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரக் குறியீட்டில் கேரளம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்தப் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாமிடத்தையும், உத்தர பிரதேசம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.

மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குவதில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் தொடா்பான குறியீட்டை மத்திய அரசின் கொள்கை வகுப்பு அமைப்பான நீதி ஆயோக் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த அமைப்பு 4-ஆவது சுகாதாரக் குறியீட்டுப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கடந்த 2019-20-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கான பட்டியலில் பெரிய மாநிலங்கள் பிரிவில், கேரளம் முதலிடத்தையும் தமிழ்நாடு, தெலங்கானா ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம் ஆகியவை கடைசி 3 இடங்களில் உள்ளன.

சிறிய மாநிலங்கள் பிரிவில் மிஸோரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திரிபுரா, சிக்கிம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. யூனியன் பிரதேசங்களில் தாத்ரா-நகா் ஹவேலி & டாமன்-டையு முதலிடத்திலும், சண்டீகா் இரண்டாவது இடத்திலும், லட்சத்தீவுகள் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஓராண்டில் சுகாதார சேவைகளை சிறப்பாக மேம்படுத்திய பெரிய மாநிலங்களுக்கான பட்டியலில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், அஸ்ஸாம் இரண்டாவது இடத்திலும், தெலங்கானா மூன்றாவது இடத்திலும் உள்ளன. சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் மிஸோரம், மேகாலயம், நாகாலாந்து ஆகியவை முன்னணியில் உள்ளன.

நீதி ஆயோக் ஒட்டுமொத்த சுகாதாரக் குறியீட்டில் கேரளம் தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின்போது 24 காரணிகள் ஆராயப்பட்டதாக நீதி ஆயோக் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், உலக வங்கி ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் குறியீட்டை நீதி ஆயோக் தயாரித்துள்ளது.

சுகாதார சேவைகளை வழங்குவதற்கான திட்டங்களை வகுக்கும்போது இந்தப் பட்டியலை மாநில அரசுகள் முன்மாதிரியாகக் கொண்டு செயல்படலாம் என நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com