'கழுதைகளைக் காணோம்' - ராஜஸ்தான் போலீசாருக்கு வந்த சோதனை!

ராஜஸ்தானில் ஹனுமன்கர் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கழுதைகள் திருடப்பட்ட சம்பவம் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது
'கழுதைகளைக் காணோம்' - ராஜஸ்தான் போலீசாருக்கு வந்த சோதனை!

ராஜஸ்தானில் ஹனுமன்கர் மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட கழுதைகள் திருடப்பட்ட சம்பவம் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதனால் குற்றவாளிகளுடன், கழுதைகளைத் தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் ஆடு திருட்டு சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் இரவு நேரத்தில் ஆட்டுப்பட்டியில் நுழைந்து ஆடு திருடிய காலம் சென்று, இன்று பட்டப்பகலிலே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து ஆடுகளைத் திருடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. 

இதேபோன்று ராஜஸ்தானில் தற்போது கழுதைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் கால்வாய் பகுதிகளில் மண் மற்றும் பொருள்களை சுமக்க கழுதைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

காவல்நிலையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கழுதைகளின் உரிமையாளர்கள்
காவல்நிலையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கழுதைகளின் உரிமையாளர்கள்

சமீபத்தில் ஹனுமன்கர் மாவட்டத்தில் பொதி சுமக்க பயன்படுத்திய கழுதைகளை மேய்ச்சலுக்கு விட்டபோது அவற்றைக் காணவில்லை. இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுக்குமாறு கழுதையின் உரிமையாளர்களுக்கு சிலர் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படியே, கடந்த சில தினங்களில் வெவ்வேறு இடங்களில் 70-க்கும் மேற்பட்ட கழுதைகளைக் காணவில்லை என்று கூறி குய்யன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீசார் முதலில் இந்த புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கழுதை உரிமையாளர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து காவல்நிலையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பின்னர், புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை கழுதைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு 15 கழுதைகளைக் கண்டுபிடித்து அதன் உரிமையாளர்களிடமும் ஒப்படைக்கச் சென்றுள்ளது. அவ்வாறு ஒப்படைக்கும்போது ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

  போராட்டத்தில் ஈடுபட்ட கழுதைகளின் உரிமையாளர்கள் 
  போராட்டத்தில் ஈடுபட்ட கழுதைகளின் உரிமையாளர்கள் 

உரிமையாளர்கள் தங்களுடைய கழுதைகளை சிண்டு, பிண்டு, காலு என்று பெயர் சொல்லி அழைத்திருக்கின்றனர். அதற்கு எந்தக் கழுதைகளும் மறுமொழி தெரிவிக்கவில்லை. இதையடுத்து, 'இவை எங்களுடைய கழுதைகள் அல்ல' என்று கூறி பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். 

உரிமையாளர்கள், தங்கள் கழுதைகளுக்கு பெயர் வைத்து அழைத்து பழக்கப்படுத்தியுள்ளது காவல்துறையினருக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் காணாமல் போன கழுதைகளைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது. 

 காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கழுதைகள்  
 காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கழுதைகள்  

உரிமையாளர்களின் அலட்சியத்தாலேயே கழுதைகள் காணாமல் போயுள்ளதாகவும், கழுதைகள் ஒரேமாதிரி இருப்பதால் அவற்றை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மறுபுறம், கழுதைகள் காணாமல் போனதால் தங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கழுதைகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'தங்களுடைய கழுதைகள்தான் வேண்டும், வேறு கழுதைகள் வேண்டாம்' என்றும் 'கழுதைகள் கிடைக்கவில்லை என்றால் பெரும் போராட்டம் நடக்கும்' என்றும்  உரிமையாளர்கள் எச்சரித்துள்ளது காவல்துறைக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

காணாமல் போன கழுதைகளைக் கண்டுபிடிக்க காவல்துறை, 5 பேர் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்து தீவிரமாக தேடி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com