வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையிலும் விவசாயிகள் பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். எனவே, அந்த அவையும் இருமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
கோரிக்கையும், நிராகரிப்பும்...: மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது. பல்வேறு அரசுத் துறைகளின் அறிக்கைகள், பொது கணக்கு குழு அறிக்கைகள், ஆய்வறிக்கைகள், நிலைக்குழு அறிக்கைகள் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டது. பின்னர் முதல் நடவடிக்கையாக நேரமில்லா நேரமும் அடுத்து கேள்வி நேரமும் தொடங்க இருந்தது. இந்த நிகழ்வுகள் தொடங்கியவுடன் முதலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், "கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவசாயிகள் நிலை குறித்து விவாதிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ், திமுக, திரிணமூல், ஆர்ஜேடி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரிக்கையை வலியுறுத்தி இடையூறு செய்து, வெளிநடப்பு செய்தனர். பின்னர், கேள்வி நேரம் தொடங்கியதும், வெளிநடப்பு செய்த கட்சிகளின் உறுப்பினர்கள் மீண்டும் அவைக்குள் வந்து அமளியில் ஈடுபட்டனர்.
வெங்கையா நாயுடு வேண்டுகோள்: இது குறித்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: விதி -267 -இன்படி அவையை ஒத்திவைத்துவிட்டு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைப் பகுதிகளில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசுவதற்கு குலாம் நபி ஆஸாத், திருச்சி சிவா, சுகுந்த் சேகர் ராய், எளமரம் கரீம், பினாய் விஸ்வம் போன்றவர்கள் நோட்டீஸ் அளித்தனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது கேள்வி நேரம். கடந்த முறை கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்காக பிரச்னை எழுப்பப்பட்டது. இந்த முறை கேள்வி நேரத்திற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தை வீணடித்து ஜனநாயகத்தை படுகொலை செய்ய முடியாது.
ஏற்கெனவே இந்த விவகாரம் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டுள்ளேன். இந்த விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திலும், நிதிநிலை அறிக்கை குறித்த விவாதத்திலும் பேசலாம். மேலும் இது தொடர்பான விவாதம் மக்களவையில் எடுத்துக் கொள்ளப்படுவதாக அறிகிறேன். பொதுவாக எந்தவொரு விவாதமும் மக்களவையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர்தான் மாநிலங்களவையில் எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம். இதனால், இந்த விவகாரம் குறித்து பின்னர் விவாதிக்கலாம். வெளிநடப்பு செய்துவிட்டு மீண்டும் அவைக்குள் வந்து இடையூறு செய்வது தவறு. தற்போது கேள்வி நேரம் தொடர ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து அமளி: ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் முதலில் காலை 10.30 மணிக்கு அவையை வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார். பின்னர், மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமையில் அவை கூடியபோது இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், பிற்பகல் 12.30 மணிக்கு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் 4 மசோதாக்கள் எடுத்துக்கொள்ளப்பட இருந்தன. ஆனால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பின. அவைத் தலைவர் வெங்கையா நாயுடு இருக்கைகளுக்கு செல்லுமாறு கூறியும் எதிர்க்கட்சினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, காலையில் அவை கூடிய போது அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், "கடந்த முறை வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது உறுப்பினர்கள் விதிகள் புத்தகத்தையே கிழித்து மையப் பகுதிக்கு வந்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். இது மிகவும் வேதனைக்குரியது. சபையில் ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் பேண வேண்டும். நாடு 100 ஆண்டு கால பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில், விதிகள், மரபுகளின்படி, இடையூறு இல்லாத விவாதங்களும் அவை நடவடிக்கைகளும் நடைபெற வேண்டும். அவையின் கண்ணியத்தை காக்க வேண்டும். குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கவும், நிதிநிலை அறிக்கை குறித்தும் விவாதிக்கவும் 20 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பொது விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் விரிவாக விவாதிக்கலாம்' என்றார்.
ஆனால், "கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு மின்சாரம், தண்ணீர் தடை செய்யப்பட்டுள்ளது. இது அவைக்குத் தெரிய வேண்டும். இது குறித்த தனியாக விவாதிக்க வேண்டும்' என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில்...: மக்களவை மாலை 4 மணிக்கு கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒருமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது, அமளிக்கு நடுவே பேசிய வேளாண்மைத் துறை அமைச்சர், "நாடாளுமன்றத்துக்கு உள்ளும், வெளியிலும் விவசாயிகள் பிரச்னை தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது' என்றார். எனினும், இதனை ஏற்காமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவையை இரவு 7 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 7 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலங்களவை காலையிலும், மக்களவை மாலையிலும் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுவிலக்கை அறிவிக்கும் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்: தமிழக காந்தியவாதிகள் கோரிக்கை

மீனவக் குடும்பங்களை ஒதுக்கிவைத்த விவகாரம்: எதிா்மனுதாரா்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு

திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை அளவீடு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


