என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்: ராகுல்
என் தந்தையை கொன்றவர்கள் மீது எந்த வெறுப்புணர்வும் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி: மறைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை தான் மன்னித்துவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அறிவித்துள்ளார்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசியதாவது:
பெண்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி என அனைத்துத்துறைகளிலும் 50 சதவீதம் என்பதைவிட 60 சதவீதம் வழங்குவது அவசியம். நீதிமன்றங்கள், ஊடகம், மக்களவை, மாநிலங்களவை, பேரவைகள் உள்ளிட்டவற்றை இளம்பெண்கள் அதிக அளவு ஆக்கிரமித்து அவை சுயமாக செயல்படும்படி செய்தால் ஜனநாயகம் வலுப்படும்.
நாட்டில் பல்வேறு கலாசாரங்கள், மொழிகள் உள்ளன. அவற்றை முழுமையாக பாதுகாக்க வேண்டும். தமிழர்கள் தமிழ் கலாசாரத்தையும், வங்காளிகள் வங்க கலாசாரத்தையும், சீக்கியர்கள் சீக்கிய கலாசாரத்தையும் என அவரவர்கள் தங்களது கலாசாரத்தை பாதுகாக்க போராட வேண்டும்.
மொழி, கலாசாரம் ஆகியவற்றை மற்றவர்கள் மீது நான் திணிக்கமாட்டேன்.
நாட்டில் பல்வேறு கலாசாரங்களையும் பாதுகாக்க வேண்டும். தமிழ் கலாசாரத்தை மதிக்கிறேன். மொழி, கலாசாரம் என எதையும் திணிக்கமாட்டேன்.
ஜனநாயகத்தை பாதுக்க கலாசாரத்துக்கு மதிப்பு அளிப்பது அவசியம். பல்வேறு சிந்தனைகளை கொண்டது தான் இந்தியா. ஒற்றை சிந்தனைக்கு இடமில்லை.
பெண்கள் வன்முறையால் பாதிக்கப்படும்போது தாங்களாகவே ஆண்களுக்கு எதிராக வெகுண்டு எழ வேண்டும். பெண்களுக்கு பெண்களால் தான் பாதுகாப்பு அளிக்க முடியும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
பெண்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்ற சிந்தனையை சமுதாயத்தில் உருவாக்கும்போது தான் பெண்களுக்கு முழுபாதுகாப்பு கிடைக்கும். குடும்பத்தில் பெண்களுக்கு நிதி அதிகாரம் வழங்க வேண்டும். பெண்களிடம் பண அதிகாரம் இருந்தால் ஆண்களை விட சிறப்பாக நிர்வாகம் செய்வார்கள்.
இந்தியாவை 4 தொழில்நிறுவனங்கள் மட்டுமே வழிநடத்தும்போது பொதுமக்கள் எப்படி தொழில் செய்ய முடியும். விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களை பாதுகாப்பது தேசிய கடமையாக கருதுகிறேன். இவை மூலம் தான் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வேலைவாய்ப்புக்கு முதுகெலும்பாக இருக்கும் இவற்றை முறித்துவிட்டால் வேலைவாய்ப்புகள் பறிபோகும்.
ஆனால், இப்போது விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு எதிராக தாக்குல் நடத்தப்படுகிறது. இதனால் தான் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்க்கிறோம். கரோனா காலகட்டத்தில் 5 சதவீத தொழில்அதிபர்களுக்கு ரூ.1.57 லட்சம் கோடி வரிச்சலுகைகளை மத்திய அரசு வழங்கியது.
ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து வசதியைகூட செய்துதரவில்லை. கேள்வி கேட்கும் மனப்பான்மையை மாணவ, மாணவிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளிடம் எவ்வித கூச்சமும் இன்றி கேள்வி எழுப்ப வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம், வன்மம் எனக்கு இல்லை.
அப்பாவை இழந்தது மிகப்பெரிய கடினமான தருணம். இதயமே பிளந்தது போன்ற உணர்வு அப்போது இருந்தது. அப்பாவை இழப்பது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதில் தொடர்புடையவர்களை நான் மன்னித்துவிட்டேன்.
வன்முறை மூலம் நம்மிடம் இருந்து எதையும் எடுத்துவிட முடியாது. ராஜீவ் காந்தி இப்போதும் என் மனதில் வாழுகிறார். அவர் இறந்ததாக நான் நினைக்கவில்லை. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன் என்றார் ராகுல் காந்தி.
இக்கூட்டத்தில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, மேலிடப் பொறுப்பாளர் திணேஷ் குண்டுராவ், பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம், அமைச்சர்கள் கமலக்கண்ணன், ஷாஜகான், மு.கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...