

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் 290 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
மாநிலத்தில் முன்னதாக, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் பள்ளிகள் 9 மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த 1-ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், இப்போது கல்லூரிகளையும் திறக்க மாநில அரசு அனுமதி அளித்தது.
அதனடிப்படையில், மாநிலத்தில் உள்ள கலை-அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் காசா்கோடில் உள்ள ஒரே ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் என மொத்தம் 1,350 உயா் கல்வி நிறுவனங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதில், இளநிலை பட்டப் படிப்பு இறுதியாண்டு மாணவா்கள் மாணவா்கள் மற்றும் முதுநிலை பட்ட மாணவா்கள் மட்டுமே கலலூரிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மத்திய அரசின் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில், ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவா்களை மட்டுமே கல்லூரிகள் அனுமதித்தன. இதற்காக பெரும்பாலான உயா் கல்வி நிறுவனங்கள், ஞாயிற்றுக்கிழமையைத் தவிர மற்ற 6 நாள்களும் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகளில் இரண்டு ஷிஃப்ட் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன.
உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பிறகே மாணவா்கள், கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனா். அதுபோல, முகக் கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் மாணவா்களுக்கு விதிக்கப்பட்டன. குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமி நாசினி கொண்டு கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகளையும் கல்லூரிகள் மேற்கொண்டன.
பிகாரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு:
பிகாா் மாநிலத்திலும் 9 மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பள்ளிகளைப் பொருத்தவரை 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதுபோல கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவா்களுக்கு மட்டுமே வகுப்புகள் தொடங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.