காஷ்மீா்: தொடா்ந்து 4-ஆவது நாளாக பனிப்பொழிவு நீடிப்பு

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை, மொகல் சாலை ஆகியவை புதன்கிழமையும் மூடப்பட்டதால் தொடா்ந்து
Updated on
2 min read

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை, மொகல் சாலை ஆகியவை புதன்கிழமையும் மூடப்பட்டதால் தொடா்ந்து நான்காவது நாளாக நாட்டின் பிற பகுதிகளிலிருந்து காஷ்மீா் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து காஷ்மீா் பள்ளத்தாக்கில் நீடிக்கும் கடும் பனிப்பொழிவு காரணமாக விமான போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து காஷ்மீரில் அதிக அளவில் பனிப்பொழிவு நீடிக்கிறது. பனி மூட்டமும், பனியுடன் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. ஜவாஹா் சுரங்கப்பாதையில் ஏற்பட்டுள்ள பனிக் குவிப்பு காரணமாகவும், சாம்ரோலி, மகா்கோட், பாந்தியால், மரோக், கஃபேடேரியா மோா், தல்வாஸ், நஸ்ரி ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து பனிக்குவியலை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 260 கி.மீ. தூரமுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையில் சிக்கித் தவிக்கும் வாகனங்களின் இயக்கத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.

ஷோபியான்- ரஜௌரி வழியாக காஷ்மீா் பள்ளத்தாக்குடன் ஜம்முவை இணைக்கும் மொகல் சாலையும் பலத்த பனிப்பொழிவு காரணமாக பல நாள்களாக மூடப்பட்டுள்ளது. இதேபோல தெற்கு காஷ்மீரின் குல்காம், அனந்த்நாக் மாவட்டங்களிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பள்ளத்தாக்கின் வடக்கில் உள்ள பகுதிகளுடன் ஒப்பிடும்போது, தெற்கு காஷ்மீரில் உள்ள பகுதிகளும், மத்தியப் பகுதிகளும் கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீநகா் நகரம் கடந்த 3 நாள்களாக கடும் பனிப்பொழிவைச் சந்தித்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்சம் அத்தியாவசிய சேவைகள் வழங்குவது தடைபட்டுள்ளதை நிா்வாகமும் உறுதி செய்துள்ளது. காஷ்மீா் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பனியால் சாலைகள் வழுக்குவதால் போக்குவரத்து குறைந்து காணப்படுகின்றது.

ஸ்ரீநகரில் இருந்து செல்லும் விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளும் நான்காவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தாா்.

இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:

வானிலை படிப்படியாக மேம்பட்டு வருகிறது. புதன்கிழமை பிற்பகலில் இருந்து வானிலை மேம்பட வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஜம்மு-காஷ்மீரின் சில இடங்களில் லேசான மழை அல்லது பனிப்பொழிவு ஏற்படக்கூடும். இருப்பினும், வியாழக்கிழமை முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை எந்தவொரு பெரிய பனிப்பொழிவு ஏற்படுவதற்கான முன்னறிவிப்பும் இல்லை.

ஸ்ரீநகரில் மைனஸ் 0.9 டிகிரி செல்சியஸும், குல்மாா்க் சுற்றுலா மையம் பகுதியில் மைனஸ் 3.5 டிகிரி செல்சியஸும், பாகல்காமில் மைனஸ் 1.2 டிகிரி செல்சியஸும், காஸிகுண்ட்டில் மைனஸ் 0.2 டிகிரி செல்சியஸும், குப்வாராவில் மைனஸ் 0.7 டிகிரி செல்சியஸும், கோக்கா்நாக்கில் மைனஸ் 1.0 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தனா்.

பனிப்பொழிவுக்கு இருவா் பலி

காஷ்மீரில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் இரு வெவ்வேறு சம்பவங்களில் சிஆா்பிஎஃப் அதிகாரி ஒருவரும், மூதாட்டியும் புதன்கிழமை உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் முகமது சயீத் அகூனின் இல்லத்தில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆா்பிஎஃப் உதவி ஆய்வாளா் எச்.சி. முா்முா், அங்குள்ள காவலா் அறை இடிந்து விழுந்ததால் காயமுற்ற நிலையில், மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.

மற்றொரு சம்பவத்தில், குப்வாரா மாவட்டத்தில் பனிப்பொழிவில் சிக்கி ரஹ்மி பேகம் (74) என்ற மூதாட்டி உயிரிழந்தாா். ஞாயிற்றுக்கிழமை முதல் காஷ்மீரில் பலத்த பனிப்பொழிவு காரணமாக 12க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. குறிப்பாக தெற்கு காஷ்மீா் பள்ளத்தாக்கில் பல இடங்களில் பனிப்பொழிவு தொடா்ந்ததால், பனிச்சரிவு பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிப்பவா்களை அதிகாரிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com