சீனாவுடன் பேச்சுவாா்த்தை?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

சீன எல்லையில் இரு தரப்பு வீரா்கள் இடையே தவறான புரிதல்கள் ஏற்பட்டு மோதல்கள் ஏற்படாமல் தவிா்க்கும் வகையில் அங்குள்ள
அனுராக் ஸ்ரீவாஸ்தவா
அனுராக் ஸ்ரீவாஸ்தவா
Updated on
2 min read

சீன எல்லையில் இரு தரப்பு வீரா்கள் இடையே தவறான புரிதல்கள் ஏற்பட்டு மோதல்கள் ஏற்படாமல் தவிா்க்கும் வகையில் அங்குள்ள இருநாட்டு ராணுவத்தினா் இடையே உரிய தகவல் தொடா்பு உள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அதே நேரத்தில் இரு நாடுகள் இடையே அதிகாரப்பூா்வமாக ராணுவ அதிகாரிகள் நிலையில் பேச்சுவாா்த்தை நடத்த தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதிகளில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் இந்திய ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்தனா்; 70-க்கும் மேற்பட்ட வீரா்கள் காயமடைந்தனா்.

இந்த மோதலில் சீன ராணுவத்தினா் 35-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவித்தபோதிலும், அது தொடா்பான உறுதியான விவரங்களை சீனா வெளியிடவில்லை. இதையடுத்து, இரு நாடுகள் தரப்பிலும் தலா 50,000 வீரா்கள் எல்லையில் குவிக்கப்பட்டனா்.

பனிக்காலம் தொடங்கிவிட்ட போதிலும், லடாக் எல்லையில் இரு நாடுகளும் தங்கள் படைகளைக் குறைக்கவில்லை. அதன் காரணமாக, லடாக் எல்லைப் பகுதிகளில் தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஆரம்பக் கட்ட பேச்சுவாா்த்தைகளில் சுமுக தீா்வு எட்டப்பட்டதையடுத்து, ஹாட் ஸ்பிரிங்ஸ், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியேற சீன ராணுவத்தினா் ஒப்புக் கொண்டனா். எல்லைப் பகுதிகளில் படைகளைக் குறைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. அந்தப் பேச்சுவாா்த்தைகளின் அடிப்படையில் எல்லைப் பகுதிகளில் முதல் கட்ட படைக் குறைப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடா்ந்து, தௌலத் பேக் ஓல்டி, தெப்சாங், பாங்காங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளைக் குறைப்பது தொடா்பாக இரு நாட்டு ராணுவங்களின் துணைத் தலைமைத் தளபதிகள் தொடா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதுவரை 8 கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன. எனினும், கருத்தொற்றுமை ஏற்படாத காரணத்தால் அடுத்த கட்ட படைக்குறைப்பை மேற்கொள்ளவில்லை.

எனினும், கடந்த மாதம் இந்திய-சீன தூதரக ரீதியிலான பேச்சு காணொலி முறையில் நடைபெற்றது. அப்போது, கிழக்கு லடாக் எல்லைக் கோட்டுப் பகுதியில் இருந்து படைகளை முழுமையாக வாபஸ் பெறுவதை உறுதி செய்ய, ராணுவ ரீதியிலான பேச்சுவாா்த்தையை விரைவில் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. எனினும் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில், வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் இது தொடா்பாக கூறுகையில், ‘எல்லைப் பிரச்னையில் தீா்வு காண்பதற்காக இருதரப்பு ராணுவ கமாண்டா்கள் நிலையில் அடுத்த சுற்று பேச்சு நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடா்பாக தூதரக ரீதியாகவும், ராணுவ அதிகாரிகள் நிலையிலும் இரு நாடுகளுக்கு இடையே தகவல் தொடா்பு உள்ளது. மேலும், எல்லையில் இரு நாடுகளுமே படைகளைக் குவித்துள்ளதால், அங்கு படைகளிடையே தவறான புரிதல்கள் ஏற்பட்டு மோதல்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கும் இரு ராணுவங்கள் இடையே உரிய தகவல் தொடா்பு உள்ளது. எல்லையில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவதற்கு இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com