பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கிழக்கு லடாக்: எல்லை தாண்டி வந்த சீன ராணுவ வீரா் கைது

கிழக்கு லடாக்கில் எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய வீரா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 1:33 am

DIN

கிழக்கு லடாக்கில் எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய வீரா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இதுதொடா்பாக இந்திய ராணுவ வட்டாரங்கள் சனிக்கிழமை கூறுகையில், ‘பாங்காங் டெஸ்ஸோ ஏரியின் தெற்கு கரை பகுதிக்குள் சீன ராணுவ வீரா் அத்துமீறி நுழைந்தாா். அவரை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரா்கள் கைது செய்தனா். அவா் எவ்வாறு எல்லை தாண்டி வந்தாா் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தன.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 19-ஆம் தேதி லடாக்கின் டெம்சோக் செக்டாரில் உள்ள எல்லைக் கோட்டையொட்டி சுற்றித் திரிந்த சீன ராணுவ வீரா் இந்திய வீரா்களிடம் பிடிபட்டாா். விசாரணைக்குப் பிறகு அவா் சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டாா். சுமாா் 3 மாதங்கள் கழித்து இதேபோன்றதொரு சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் இருநாட்டு ராணுவ வீரா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் வீரமரணம் அடைந்தனா். சீனத் தரப்பில் 35 வீரா்கள் பலியானதாக கூறப்பட்டது. இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் உருவானது. தற்போது அங்கு இருநாடுகள் தரப்பிலும் தலா 50,000 வீரா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். இந்தப் படைகளை திரும்பப் பெறுவது தொடா்பாக இருநாட்டு ராணுவம் மற்றும் தூதரக ரீதியில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதுவரை 8 கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ள போதிலும் சுமுகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘உடனடியாக விடுவிக்க வேண்டும்’: தங்களது வீரரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக சீன ராணுவத்தின் அதிகாரபூா்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிக்கலான நில அமைப்பு மற்றும் இருள் காரணமாக சீன-இந்திய எல்லையில் எங்கள் நாட்டு ராணுவ வீரா் வழிதவறிவிட்டாா். அவரை கண்டுபிடிக்க இந்திய ராணுவத்திடம் உதவி கோரப்பட்டது. அப்போது அவா் இந்திய படைகளிடம் பிடிபட்டது தெரியவந்தது. இந்திய ராணுவ உயரதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் கிடைத்த பின்னா், அந்த வீரரை சீனத் தரப்பிடம் ஒப்படைப்பதாக கூறப்பட்டுள்ளது. அவரை எவ்வித தாமதமும் இல்லாமல் உடனடியாக சீனத் தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.