கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: அமைச்சர்களாக 7 பேர் பதவி ஏற்பு

முதல்வர் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய அமைச்சர்களாக 7 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: அமைச்சர்களாக 7 பேர் பதவி ஏற்பு

பெங்களூரு: முதல்வர் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய அமைச்சர்களாக 7 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பாஜக தேசியத் தலைமை அனுமதிஅளித்ததைத் தொடர்ந்து, முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசின் அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. 
பெங்களூரு ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை பிற்பகல் 3.50 மணிக்கு நடைபெற்ற விழாவில், பாஜக மூத்த எம்.எல்.ஏ.க்கள் உமேஷ் கத்தி (ஹுக்கேரி தொகுதி), எஸ்.அங்காரா (சுள்ளியா தொகுதி), முருகேஷ் நிரானி (பிலகி தொகுதி), அரவிந்த் லிம்பாவளி (மகாதேவபுரா தொகுதி), எம்.எல்.சி.க்கள் ஆர்.சங்கர், எம்.டி.பி.நாகராஜ், சி.பி.யோகேஷ்வர் ஆகிய 7 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அனைவரும் கடவுள் பெயரில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். 7 பேருக்கும் ஆளுநர் வஜுபாய்வாலா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு ஆளுநர் வஜுபாய்வாலா, முதல்வர் எடியூரப்பா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்த விழாவில், முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, லட்சுமண் சவதி, பாஜக மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீல், பாஜக மேலிடப் பொறுப்பாளர் அருண்சிங், பாஜகவின் முன்னணித் தலைவர்கள், தலைமைச் செயலாளர் பி.ரவிக்குமார், உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். 
7 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளதால் அமைச்சரவையில் காலியாக இருந்த அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. அமைச்சர் எச்.நாகேஷ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதால், 34 பேர் கொண்ட அமைச்சரவையில் ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளது. 2019-ஆம் ஆண்டு ஜூலையில் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட எடியூரப்பா, 3-ஆவது முறையாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார்.
ஏற்கெனவே வாக்களித்திருந்தபடி, காங்கிரஸில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்த எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சியைக் கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த சி.பி.யோகேஷ்வருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 8 முறை எம்.எல்.ஏ.வாக வென்றுள்ள உமேஷ் கத்தி, 6 முறை எம்.எல்.ஏ.வாகியுள்ள எஸ்.அங்காரா, பாஜக துணைத் தலைவர்கள் அரவிந்த் லிம்பாவளி, முருகேஷ் நிரானி ஆகியோருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் எஸ்.அங்காரா முதல்முறையாக அமைச்சராகியுள்ளார். மற்ற 6 பேரும் ஏற்கெனவே அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். 
காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய என்.முனிரத்னாவை அமைச்சராக்குவதாக வெளிப்படையாக முதல்வர் எடியூரப்பா வாக்குறுதி அளித்திருந்தும், அவர் அமைச்சராக்கப்படவில்லை. இது முனிரத்னாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் பதவி கிடைக்காத பல மூத்த எம்.எல்.ஏ.க்கள் பாஜக தலைமைக்கு எதிராக அதிருப்தி அடைந்துள்ளனர்.
ராஜிநாமா:
இதனிடையே, கலால் துறை அமைச்சர் எச்.நாகேஷை அமைச்சரவையில் இருந்து நீக்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, தனது ராஜிநாமா கடிதத்தை அளிக்குமாறு எச்.நாகேஷ் அறிவுறுத்தப்பட்டார். முதலில் இதற்கு இணங்க மறுத்த எச்.நாகேஷ், வேறு வழியில்லாமல் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் சிறுதொழில் துறை அமைச்சராக இருந்த எச்.நாகேஷ், தனக்கு முக்கியமான துறையை வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி பதவியை ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து, பாஜகவில் இணைந்த எச்.நாகேஷ், 2019-ஆம் ஆண்டில் அமைச்சராக்கப்பட்டார். முதல்வர் எடியூரப்பா அரசில் அவர் கலால் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். எச்.நாகேஷ் ராஜிநாமா அளித்ததால் அமைச்சரவையில் ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளது.
இதனிடையே, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட எச்.நாகேஷ், இணையமைச்சர் தகுதியுள்ள டாக்டர் அம்பேத்கர் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இந்தப் பதவி வகித்து வந்த எஸ்.முனிகிருஷ்ணா, சந்தை தகவல் தொடர்பு மற்றும் விளம்பர நிறுவனத்தின் தலைவராக நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com