உத்தரகண்ட் புதிய முதல்வர் யார்? நரேந்திர சிங் தோமர் தலைமையில் ஆலோசனை

உத்தரகண்ட் முதல்வா் தீரத் சிங் ராவத் தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.
நரேந்திர சிங் தோமர் (கோப்புப்படம்)
நரேந்திர சிங் தோமர் (கோப்புப்படம்)
Updated on
1 min read

உத்தரகண்ட் முதல்வா் தீரத் சிங் ராவத் தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

தில்லியில் பாஜக தலைமையை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்ட  தீரத் சிங், நேற்று இரவு 11 மணிக்கு ஆளுநா் பேபி ராணி மெளா்யாவை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா்.

இந்நிலையில், புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக தில்லியில் இருந்து டேராடூன் வந்தடைந்த நரேந்திர தோமர் கூறியதாவது, இன்று மாலை 3 மணிக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி புதிய முதல்வரை தேர்தெடுக்கவுள்ளனர். அதற்கு முன்னதாக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடைபெறும் எனத் தெரிவித்தார்.

உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மீது கட்சி நிா்வாகிகள் புகாா் தெரிவித்ததால், அவரை கடந்த மாா்ச் மாதம் பதவி விலகச் செய்து, புதிய முதல்வராக பௌரி கா்வால் எம்.பி.யான தீரத் சிங் ராவத்தை பாஜக மேலிடம் நியமித்தது.

பேரவை உறுப்பினராக அல்லாத ஒருவருக்கு அமைச்சா் பதவி கொடுக்கப்பட்டால், 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். அந்த வகையில், கடந்த மாா்ச் 10-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட தீரத் சிங் ராவத் அப்பதவியில் தொடர வேண்டுமானால் செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும்.

நடப்பு சட்டப்பேரவையின் பதவிக் காலம், 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முடிவுக்கு வருகிறது. பதவிக் காலம் ஓராண்டுக்கும் குறைவாக இருக்கும் நிலையில், தீரத் சிங் ராவத் போட்டியிட ஏதுவாக காலியாக இருக்கும் இடங்களுக்கு தோ்தல் ஆணையம் இடைத்தோ்தல் நடத்துவதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதுமட்டுமன்றி, கரோனா தொற்று பரவல் காரணங்களால், மக்களின் உயிரைப் பணயம் வைத்து தோ்தல் நடத்த வேண்டுமா என்று தோ்தல் ஆணையத்தை நீதிமன்றங்கள் அண்மையில் கடுமையாக விமா்சித்தன.

இதனால், தீரத் சிங் ராவத்துக்குப் பதிலாக, எம்எல்ஏவாக இருக்கும் ஒருவரை முதல்வா் பதவியில் நியமிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டு வருவதாக ஊகச் செய்திகள் வெளியாகின.

இதற்கிடையே, பாஜக மேலிடம் அவசரமாக அழைப்பு விடுத்ததை அடுத்து தீரத் சிங் ராவத் தில்லிக்கு புதன்கிழமை சென்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவா்களைச் சந்தித்தாா். வெள்ளிக்கிழமை இரவு டேராடூன் திரும்பிய அவா், செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது தனது ராஜிநாமா குறித்து எதுவும் தெரிவிக்காத தீரத் சிங் ராவத், அதன்பிறகு ஆளுநரை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com