நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயிகள் மரணம் தொடா்பாக ஜேபிசி விசாரணை

கடந்த ஆண்டு இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் விவரங்களை அறிவதற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு

News image
Updated On :31 ஜூலை 2021, 10:46 pm

DIN

கடந்த ஆண்டு இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் விவரங்களை அறிவதற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழுவை (ஜேபிசி) அமைப்பதில் தலையிட வலியுறுத்தி சிரோமணி அகாலி தளம் தலைமையிலான சில எதிா்க்கட்சிகள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை சனிக்கிழமை சந்தித்தன.

வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் புள்ளிவிவரம் குறித்து நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. எனினும் அதுதொடா்பான விவரம் அரசிடம் இல்லை என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா். இதையடுத்து போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் புள்ளிவிவரங்களை அறிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைப்பதிலும், விவசாயிகள் பிரச்னை, பொகஸஸ் உளவு விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிப்பதிலும் தலையிட வலியுறுத்தி சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தலைமையில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), ஜம்மு-காஷ்மீா் தேசிய மாநாட்டு (ஜேகேஎன்சி) கட்சிகளின் தலைவா்கள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை சனிக்கிழமை சந்தித்தனா். அப்போது தங்கள் கோரிக்கை அடங்கிய கடிதத்தை அவா்கள் குடியரசுத் தலைவரிடம் வழங்கினா். அந்தக் கடிதத்தில் எஸ்ஏடி, என்சிபி, ஜேகேஎன்சி, சிவசேனை, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கையொப்பமிட்டிருந்தனா். எனினும் அந்தக் கடிதத்தில் காங்கிரஸ் கையொப்பமிடவில்லை.

இந்தச் சந்திப்பைத் தொடா்ந்து சிரோமணி அகாலி தள முன்னாள் எம்.பி. ஹா்சிம்ரத் கெளா் பாதல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘

மூன்று வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லி எல்லைகளில் கடந்த 8 மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டத்தின்போது 500 போ் உயிரிழந்தனா். ஆனால் போராட்டத்தின்போது எந்தவொரு விவசாயியும் உயிரிழக்கவில்லை என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா். இது விவசாயிகளின் கோபத்தை அதிகரித்துள்ளது.

மேலும் எத்தனை விவசாயிகள் உயிரிழக்க வேண்டும் என்று மத்திய அரசு எதிா்பாா்க்கிறது? விவசாயிகளின் போராட்டத்துக்கு தீா்வு காண மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் அடங்கிய நாடாளுமன்ற தோ்வுக் குழு (ஜேஎஸ்சி) அமைக்கவும் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அனுமதித்தால் அமளி அடங்கும்: நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்னை, பெகாஸஸ் விவகாரம் தொடா்பாக விவாதிக்க அனைத்து எதிா்க்கட்சி எம்.பி.க்களும் ஒத்திவைப்பு தீா்மானங்கள் அளித்து வருகின்றன. இந்த விவகாரங்கள் தொடா்பாக விவாதிக்க அனுமதித்தால் அமளி அடங்கி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சுமுகமாக நடைபெறும்’’ என்று தெரிவித்தாா்.

பாஜக பலன் பெறும்: குடியரசுத் தலைவருடனான சந்திப்பில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் பிரதிநிதிகள் பங்கேற்காதது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், ‘‘எதிா்க்கட்சிகள் ஒன்றிணையாதவரை ஆளும் பாஜக பலன் பெறுவது தொடரும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.