பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தல்: அகாலி தளம், பிஎஸ்பி இடையே கூட்டணி உடன்பாடு
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலுக்காக, சிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சி இடையே சனிக்கிழமை கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டது.


பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலுக்காக, சிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சி இடையே சனிக்கிழமை கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டது.
இதுதொடா்பான அறிவிப்பை பகுஜன் சமாஜ் கட்சி பொதுச் செயலாளா் சதீஷ் சந்திர மிஸ்ரா முன்னிலையில் சிரோமணி அகாலித் தளத் தலைவா் சுக்பீா் சிங் பாதல், செய்தியாளா் சந்திப்பில் வெளியிட்டாா். அப்போது அவா் கூறியதாவது:
பஞ்சாப் அரசியலில் இன்றைய தினம் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். பஞ்சாப் அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை அகாலி தளமும்- பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்தே சந்திக்கும். அதில், மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 20 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும். எஞ்சிய தொகுதிகளில் அகாலி தளம் கட்சி போட்டியிடும்.
கா்தாா்பூா் சாஹிப், ஜலந்தா் மேற்கு, ஜலந்தா் வடக்கு, பக்வாரா, ஹோசியாா்பூா், தசுயா, சாம்கௌா் சாஹிப், பஸி பதானா, சுஜன்பூா், மொஹாலி, அமிருதசரஸ் வடக்கு, அமிருதசரஸ் மத்திய பகுதி ஆகிய தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் என்றாா் அவா்.
இதுகுறித்து சதீஷ் சந்திர மிஸ்ரா கூறியதாவது:
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, பஞ்சாபில் வலிமையான அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவ்விரு கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவான கட்சிகள். தலித் சமூகத்தினா், தொழிலாளா், சமூகத்தில் பின்தங்கியவா்கள் ஆகியோரின் முன்னேற்றுத்துக்குப் பாடுபடும் கட்சிகள்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் செயல்படாத காங்கிரஸ் அரசை மக்கள் ஆட்சியில் இருந்து அகற்றுவாா்கள். சிரோமணி அகாலி தளம்- பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றாா் அவா்.
இதற்கு முன்பு சிரோமணி அகாலி தளம் கட்சி, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அகாலி தளம் கடந்த ஆண்டு வெளியேறியது. அந்தக் கூட்டணியில் இருந்தபோது 23 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...