ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகள் கூட்டணி முழுமை பெறாது: சஞ்சய் ரௌத்

தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், காங்கிரஸ் இல்லாமல் அந்தக் கூட்டணி முழுமை பெறாது என்றும் சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :26 ஜூன் 2021, 10:50 am

DIN


தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், காங்கிரஸ் இல்லாமல் அந்தக் கூட்டணி முழுமை பெறாது என்றும் சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரௌத் தெரிவித்தது:

"மூன்றாவது அல்லது வேறு எந்தவொரு அணிக்குமான தேவையில்லை. சரத் பவார் அதை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார். சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவும் இதையே வெளிப்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகள் கூட்டணியில் காங்கிரஸ் முக்கியப் பங்கு வகிக்கும். தற்போதைய சூழலில் வலுவான மாற்றாக இருக்கும். அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸையும் இழுக்கும் வரை அந்தப் பணி நிறைவடையாது."

தில்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க சரத் பவார் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவதாக இந்தக் கூட்டம் பார்க்கப்பட்டது. அதேசமயம், காங்கிரஸ் இல்லாமலும் இந்தக் கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுகளும் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. 

மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் இதுபற்றி கூறுகையில், "காங்கிரஸ் இல்லாமல் பாஜகவுக்கு எதிராக அமைக்கப்படும் அணி மறைமுகமாக பாஜகவுக்கே சாதகமாக அமையும்" என்றார்.

கூட்டத்தைப் பற்றி சரத் பவார் வெள்ளிக்கிழமை தெரிவிக்கையில், "தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் கூட்டத்தில் நடைபெறவில்லை. அப்படியொரு கூட்டணி அமைந்தாலும், அது கூட்டுத் தலைமையாகத்தான் இருக்கும்." என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.