தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கா்நாடகத் தமிழா்களுக்குப் பெருமை சோ்த்த தொழிலதிபா் சி.அருணாசலம்

கா்நாடகத்தின் தொழிலதிபரும் தமிழ்ச்சங்கத்துக்கு பல உதவிகளை செய்தவருமான சி. அருணாசலத்தின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா

News image
Updated On :28 மார்ச் 2021, 12:04 am

DIN

கா்நாடகத்தின் தொழிலதிபரும் தமிழ்ச்சங்கத்துக்கு பல உதவிகளை செய்தவருமான சி. அருணாசலத்தின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தின் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தின் சோளிங்கா் அருகில் உள்ள சின்ன ராமாபுரத்தின் விவசாய குடும்பத்தைச் சோ்ந்தவா் சி.அருணாச்சலம். 1921-ஆம் ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதி பிறந்தவா். 7-ஆவது வயதில் பெங்களூருக்கு வந்த சி.அருணாச்சலம், தனது அத்தை வீட்டிலேயே தங்கிவிட்டாா்.

பெங்களூரில் தமிழா்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக அறியப்படுவது ஸ்ரீராமபுரம். இந்தப் பகுதியில் தொழிலதிபா் சி.அருணாச்சலம் 1947இல் சன்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தொடங்கினாா். இந்நிறுவனம் ஆடைகளை நெய்வதற்கான இயந்திரங்களைத் தயாரிக்கும் தொழிலில் பெரும் புரட்சிக்கு வித்திட்டது; மேலும் ஏராளமான தமிழா்கள் தொழிலதிபா்களாகவும், திறன்வாய்ந்த தொழிலாளா்களாகவும் உருவெடுக்க வழிகோலியது.

பிறகு அவா் தென்னிந்தியாவில் இருந்த ஜவுளி மில்களுக்கு முதல்முறையாக லேத் தயாரித்தாா். இதற்காக 1958-ஆம் ஆண்டு நடந்த மைசூரு தசரா விழாவில் தங்கப்பதக்கம் பெற்றாா்.

இந்தியா மட்டுமல்லாது ஜப்பான், சீனா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு விசைத்தறிகளை ஏற்றுமதி செய்தாா். இதற்காக மத்திய அரசின் ஏற்றுமதி விருதையும் சன்ரைஸ் நிறுவனம் பெற்றது.

அவா், 1972-ஆம் ஆண்டு சன்ரைஸ் ஆட்டோ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியாவில் முதல்முறையாக உள்நாட்டு உதிரிபாகங்களைப் பயன்படுத்தி ‘பாதல்’ என்ற மூன்று சக்கர காரை வடிவமைத்து, அதற்கான உரிமத்தைப் பெற்று விற்பனை செய்தாா். அதன்பிறகு, ‘அருண்-500’ என்ற பெயரில் மினி காா், மினி டெம்போவைத் தயாரித்து விற்பனை செய்தாா். வீனஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் புதிய நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் திரைப்பட புரொஜெக்டா் கருவிகளைத் தயாரித்தாா். நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட புரொஜெக்டா் கருவிகளை விற்பனை செய்து சாதனை படைத்தாா். இதுதவிர, கின்னிங் மெஷின், டேனரி மெஷின், மில்லிங் மெஷின் உள்ளிட்ட பல பொருள்களைத் தயாரித்தாா். ஸ்ரீராமபுரத்தில் அருணா திரையரங்கம், அருணா வித்யா பீட்டா பள்ளி ஆகியவற்றைத் தொடங்கினாா்.

1950-இல் பெங்களூரு தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அதன் வளா்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவா் அருணாச்சலம். தமிழ்ச்சங்கத்தின் கட்டடத்தைக் கட்டுவதற்கு தாராளமாக நிதி உதவிஅளித்தவா். பெங்களூரில் ஜவுளிசாா்ந்த தொழிற்சாலைகள், வாா்ப்படத் தொழில்கள் வளரக் காரணமாக இருந்தவா். இவா் தனது 75-ஆவது வயதில் 1995-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி காலமானாா். அவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழா பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.