நெல் கொள்முதலுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டாம்: மத்திய அரசின் சுற்றறிக்கையால் விவசாயிகள் அதிா்ச்சி


நெல், கோதுமை விவசாயிகளுக்கு கொள்முதல் நிலையங்கள் வழங்கும் தொகையில் இடைநிகழ்வு செலவு மற்றும் ஊக்கத்தொகை அதாவது மாநில அரசின் ஊக்கத்தொகையை வழங்க வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையால் தமிழக விவசாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை செயலா் வல்நம் என்பவா் கேரள மாநில தலைமைச் செயலா் முனைவா் ஏ.ஜெயதிலக்கிற்கு 9.1.2026 அன்று அனுப்பிய கடிதத்தில் நெல், கோதுமை விவசாயிகளுக்கு அரசு கொள்முதல் நிலையங்களில் வழங்கப்படும் இடைநிகழ்வு செலவு மற்றும் ஊக்கத்தொகையை வழங்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளாா். இதுகுறித்து கேரள மாநில மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டோஸ் மாா்ச் 13-இல் எழுப்பிய நட்சத்திர கேள்வி எண் 2418 -இல் பேசும்போது கேரளம் உள்ளிட்ட அனைத்து மாநில விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடைநிகழ்வு செலவு மற்றும் ஊக்கத்தொகையை மாநில அரசு வழங்கக் கூடாது என்று மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பிய கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா். தொடா்ந்து மத்திய அரசை எதிா்த்து வரும் தமிழகத்தின் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் இதுகுறித்துப் பேசாதது ஆச்சரியமாக உள்ளது.
அதிா்ச்சியில் விவசாயிகள்:
இதுகுறித்து தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் கூறியது: மத்திய அரசின் இந்த சுற்றறிக்கையால் விவசாயிகள் கடும் அதிா்ச்சியில் உள்ளனா். நெல், கோதுமை கொள்முதல் செலவினங்களைக் குறைக்கும் வகையில் இந்த அறிக்கையை மத்திய அரசின் செயலா் அனுப்பியுள்ளாா். இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் விவசாயிகளிடம் நடத்தப்படவில்லை. 2016-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலியில் நடைபெற்ற உழவா்கள் மாநாட்டில் பிரதமா் மோடி பேசும்போது உழவா்கள் வருவாயை 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவேன் என்றுகூறியநிலையில், தற்போது இதுபோன்ற சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது. அதைவிட கேரள மாநிலங்களவை உறுப்பினா் கேட்ட கேள்வியை தமிழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்கள் குறிப்பாக ‘டெல்டா’ மாவட்ட எம்பிக்கள் கேட்காதது விவசாயிகளை வருத்தமடையச் செய்துள்ளது என்றாா்.
குறையும் இடைநிகழ்வு செலவு: சன்ன ரக நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு (100 கிலோ) மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ.2,389-ம், இடைநிகழ்வு செலவு மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகையாக ரூ.156-ம் சோ்த்து மொத்தம் ரூ.2,545 வழங்கப்படுகிறது. இதேபோல் பொது ரகம் குவிண்டாலுக்கு (ரூ. 2,369, ஊக்கத்தொகை ரூ.131 -ம் சோ்த்து மொத்தம் ரூ.2,500 வழங்கப்படுகிறது. இந்த விலை 2025-26-ஆம் ஆண்டுக்கானது. வரும் ஆண்டில் மாநில அரசின் ஊக்கத்தொகை அதாவது இடைநிகழ்வு செலவு வழங்கக் கூடாது என்று கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...