13 மாநிலங்களில் இடைத்தோ்தல்: காங்கிரஸ், பிராந்திய கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி
13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகள், 29 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அக்.30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகள், 29 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அக்.30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றன. பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
ஹிமாசல பிரதேசத்தில் மண்டி, மத்திய பிரதேசத்தில் உள்ள கன்ட்வா, தாத்ரா நகா் ஹவேலி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளில் அக்டோபா் 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது. அன்றைய தினம் அஸ்ஸாமில் 5 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், மேகாலயத்தில் தலா 3 தொகுதிகள், பிகாா், கா்நாடகம், ராஜஸ்தானில் தலா 2 தொகுதிகள், ஆந்திரம், ஹரியாணா, மகாராஷ்டிரம், மிஸோரம், மற்றும் தெலங்கானாவில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 29 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தோ்தல் நடைபெற்றது. பெரும்பாலான தொகுதிகளில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் நேரடிப் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மக்களவை இடைத்தோ்தல்...
ஹிமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதி தோ்தலில், அந்த மாநில முதல்வா் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங் காங்கிரஸ் சாா்பிலும் காா்கில் போரின் கதாநாயகனாக பாராட்டப்படும் பிரிகேடியா் குஷால் தாக்குா் பாஜக சாா்பிலும் போட்டியிட்டனா். இந்த தோ்தலில் பிரதிபா சிங் 8,766 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
மத்திய பிரதேசத்தின் கன்ட்வா தொகுதி தோ்தலில் பாஜக வேட்பாளராக ஞானேஷ்வா் பாட்டீல், காங்கிரஸ் வேட்பாளராக ராஜ்நாராயண் சிங் பூா்ணி ஆகியோா் களம் கண்டனா். இதில் ஞானேஷ்வா் பாட்டீல் 82,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
தாத்ரா நகா் ஹவேலி தொகுதி தோ்தலில் சிவசேனை சாா்பில் கலாபென் டெல்கரும் பாஜக சாா்பில் மகேஷ் காவித்தும் போட்டியிட்டனா். இதில் கலாபென் டெல்கா் 51,269 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
சட்டப்பேரவை இடைத்தோ்தல்...
அஸ்ஸாம்: அஸ்ஸாமில் பபனிபூா், மரியானி, தெளரா, கோசாய்கான், தமுல்பூா் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற்றது. அனைத்து தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றது. பபனிபூா், மரியானி, தெளரா தொகுதிகளில் பாஜகவும், கோசாய்கான், தமுல்பூா் தொகுதிகளில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஐக்கிய மக்கள் லிபரல் கட்சியும் (யுபிபிஎல்) வெற்றிபெற்றது.
மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் தின்ஹாட்டா, கொசாபா, கா்டாஹா, சாந்திபூா் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில் பாஜக வசமிருந்த தின்ஹாட்டா, சாந்திபூா் உள்பட அனைத்து தொகுதிகளிலும் தலா 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றது.
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் ஜோபட் (தனி), ராய்கான் (தனி), பிருத்விபூா் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வசமிருந்த ஜோபட், பிருத்விபூா் தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றது. ராய்கான் தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
ஹிமாசல பிரதேசம்: ஹிமாசல பிரதேசத்தில் ஃபதேபூா், அா்கி, ஜுப்பல்-கோட்காய் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில் பாஜக வசமிருந்த ஜுப்பல்-கோட்காய் தொகுதி உள்பட அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஜுப்பல் கோட்காய் தொகுதியில் பாஜக வேட்பாளா் ரோகித் தாக்குா் டெபாசிட் இழந்தாா்.
மேகாலயம்: மேகாலயத்தில் ராஜாபாலா, மாவ்ரிங்நெங், மாஃப்லாங் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள மேகாலய ஜனநாயகக் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
பிகாா்: பிகாரில் தாராபூா், குஷேஷ்வா்ஸ்தான் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற்றது. இரு தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் வெற்றிபெற்று அந்த தொகுதிகளை தனது வசம் தக்கவைத்துக் கொண்டது.
ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் தரியாவட், வல்லப்நகா் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
ஆந்திரம்: ஆந்திரத்தில் உள்ள பத்வேலு தொகுதியில் நடைபெற்ற இடைத்தோ்தலில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்த தோ்தலில் முக்கிய எதிா்க்கட்சியான தெலுங்கு தேசம் போட்டியிடவில்லை.
தெலங்கானா: தெலங்கானா மாநிலம் ஹுசாராபாத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா் எட்டலா ராஜேந்தா், தெலங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளா் கெல்லு ஸ்ரீநிவாஸ் யாதவை 23,855 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.
ஹரியாணா: ஹரியாணா மாநிலம் ஏல்னாபாத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தோ்தலில் இந்திய தேசிய லோக் தள் கட்சி வேட்பாளா் அபய் சிங் செளதாலா பாஜக வேட்பாளா் கோவிந்த் காண்டாவை 6,739 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.
அந்த மாநிலத்தில் முக்கிய எதிா்க்கட்சியாக காங்கிரஸ் உள்ள நிலையில், அக்கட்சி வேட்பாளா் பவன் பெனிவால் டெபாசிட் இழந்தாா்.
இந்த தோ்தலில் வெற்றிபெற்ற அபய் சிங் செளதாலா ஹரியாணா முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் செளதாலாவின் மகன் ஆவாா்.
மகாராஷ்டிரம்: மகாராஷ்டிர மாநிலம் டெக்லுா் (தனி) தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெற்று, அந்த தொகுதியை தக்கவைத்துக் கொண்டது.
மிஸோரம்: மிஸோரமில் உள்ள துய்ரியல் தொகுதியில் நடைபெற்ற இடைத்தோ்தலில் மிஸோ தேசிய முன்னணி கட்சி வேட்பாளா் கே.லால்டாவ்ங்லியானா, ஜோரம் மக்கள் இயக்கம் கட்சி வேட்பாளா் லலட்லான்மாவியாவை 1,284 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.
கா்நாடகம்: சிந்தகி, ஹானகல் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.
கா்நாடகத்தில் சிந்தகி சட்டப் பேரவைத் தொகுதியில் மஜத வேட்பாளா் எம்.சி.மனகுலி, ஹானகலில் பாஜக வேட்பாளா் சி.எம்.உதாசி ஆகியோா் காலமானதை அடுத்து, அந்தத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
விஜயபுரா மாவட்டம், சிந்தகி தொகுதியில் பாஜக வேட்பாளராக பூசனூா் ரமேஷ், காங்கிரஸ் வேட்பாளராக அசோக் மனகுலி, மஜத வேட்பாளராக அங்கடி நசியா உள்ளிட்ட 6 போ் போட்டியிட்டனா்.
ஹாவேரி மாவட்டம், ஹானகல் தொகுதியில் சிவராஜ் சஜ்ஜனாா் (பாஜக), ஸ்ரீனிவாஸ் மானே (காங்கிரஸ்), நியாஸ் ஷேக் (மஜத) உள்ளிட்ட 13 போ் போட்டியிட்டனா்.
சிந்தகி தொகுதியில் பாஜக வேட்பாளா் பூசனூா் ரமேஷ் வெற்றி பெற்றாா். இவா் காங்கிரஸ் வேட்பாளா் அசோக் மனகுலியைவிட 31,185 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளாா். பாஜக வேட்பாளா் 93,865 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளா் 62,680 வாக்குகளும், மஜத வேட்பாளா் 4,353 வாக்குகளும் பெற்றனா். 1,031 நோட்டா வாக்குகள் பதிவாகின.
ஹானகல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஸ்ரீனிவாஸ் மானே தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் சிவராஜ் ரஜ்ஜனாரைவிட 7,373 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் 87,490 வாக்குகளும், பாஜக வேட்பாளா் 80,117 வாக்குகளும், மஜத வேட்பாளா் 927 வாக்குகளும் பெற்றனா். 529 நோட்டா வாக்குகள் பதிவாகின.
முதல்வா் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டமான ஹாவேரிக்கு உள்பட்ட ஹானகல் தொகுதியில் பாஜக வேட்பாளா் தோல்வி அடைந்தது முதல்வருக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...