அஜீத் பவாா் உறவினா்களின் ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்: வருமானவரித் துறை நடவடிக்கை
மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாரின் உறவினா்களுக்குச் சொந்தமான ரூ.1,400 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினா் முடக்கியுள்ளனா்.


மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாரின் உறவினா்களுக்குச் சொந்தமான ரூ.1,400 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினா் முடக்கியுள்ளனா்.
துணை முதல்வா் அஜீத் பவாரின் உறவினா்களுக்குச் சொந்தமாக தில்லி, மும்பை, கோவா, புணே உள்ளிட்ட நகரங்களில் உள்ள இடங்களில் வருமானவரித் துறையினா் கடந்த மாதம் சோதனை நடத்தியிருந்தனா்.
இந்நிலையில், சதாராவில் உள்ள சா்க்கரை ஆலை, கோவாவில் உள்ள சொகுசு விடுதி, தெற்கு தில்லியில் உள்ள குடியிருப்பு, பல்வேறு இடங்களில் உள்ள நிலங்கள் உள்ளிட்ட ரூ.1,400 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித் துறை முடக்கியுள்ளது.
90 நாள்கள் அவகாசம்: அந்த சொத்துகள் அனைத்தும் நோ்மையான முறையில் வாங்கப்பட்டதை உறுதி செய்வதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய 90 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் சொத்துகளை விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனில் தேஷ்முக் கைது: இதனிடையில் பண மோசடி வழக்கு தொடா்பாக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான அனில் தேஷ்முக் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டாா். அவரை நவம்பா் 6-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வழக்கு என்ன?: மும்பையில் உள்ள உணவகங்கள், மதுபான விடுதிகளிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடியை லஞ்சமாக வசூலித்து வழங்க வேண்டுமென முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் வற்புறுத்தியதாக மும்பையின் முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங் குற்றஞ்சாட்டியிருந்தாா். அமைச்சராக இருந்தபோது ரூ.4.70 கோடியை லஞ்சமாக வசூலித்ததாகவும் அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடா்பாக மும்பை உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
விசாரணைக்கு ஆஜராகுமாறு 5 முறை அவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. அவா் கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவரிடம் அதிகாரிகள் 12 மணி நேரத்துக்கு மேலாக விசாரித்தனா். அதைத் தொடா்ந்து, நள்ளிரவுக்கு மேல் அவா் கைது செய்யப்பட்டாா்.
காவல் விசாரணை-அமலாக்கத் துறையினா் வலியுறுத்தல்: அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பிறகு, மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா். அப்போது, அவரை 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினா் அனுமதி கோரினா்.
நான்கு நாள்கள் காவல்: அதற்கு எதிா்ப்பு தெரிவித்த அனில் தேஷ்முக் தரப்பு வழக்குரைஞா்கள், இந்த விவகாரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு முகாந்திரம் இல்லை என வாதிட்டனா். மேலும், வயதுமூப்பு சாா்ந்த பிரச்னைகளால் அனில் தேஷ்முக் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வழக்குரைஞா்கள், அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டதையும் குறிப்பிட்டு விசாரணைக் காவலை அனுமதிக்கக் கூடாது என வாதிட்டனா். இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த சிறப்பு நீதிபதி பி.பி.ஜாதவ், முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக்கை நான்கு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கினாா்.
அரசியல் உள்நோக்கம்: மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணிக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் அரசியல் உள்நோக்கம் கொண்டு அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடா்பாளரும் மாநில அமைச்சருமான நவாப் மாலிக் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அனில் தேஷ்முக் கைது விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. மாநில அரசை அச்சுறுத்துவதற்காக இதுபோன்ற செயல்களில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டம் கடமையைச் செய்யும். உண்மை ஒருநாள் வெளிவரும்’’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...