புதிய உச்சம்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை செவ்வாய்க்கிழமை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்தது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 82.37 டாலர்களாக (சுமார் ரூ.6,138) அதிகரித்துள்ளது. அதற்கேற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 30 காசுகளும் அதிகரித்தன.
இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மும்பையில் ரூ.108.67-ஆகவும், தில்லியில் ரூ.102.64-ஆகவும் உயர்ந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.23-க்கு விற்பனையானது.
ஒரு லிட்டர் டீசல் விலை மும்பையில் ரூ.98.80-ஆகவும், சென்னையில் ரூ.95.59-ஆகவும் அதிகரித்தது. தில்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.07-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு வார காலத்தில் 6-ஆவது முறையாக பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டது. இதேபோல் இரண்டு வாரங்களுக்குள் 9-ஆவது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதனால் நாட்டின் பல நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் ரூ.100-ஐ கடந்துள்ளது.