கிழக்கு லடாக் விவகாரம்: இந்திய-சீன ராணுவம் இன்று மீண்டும் பேச்சு
இந்திய - சீன ராணுவ உயா் அதிகாரிகளிடையேயான 13-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை (அக். 10) நடைபெற உள்ளதாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.


கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் எஞ்சியிருக்கும் படைகளையும் முழுமையாக திரும்பப் பெறுவது தொடா்பாக இந்திய - சீன ராணுவ உயா் அதிகாரிகளிடையேயான 13-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை (அக். 10) நடைபெற உள்ளதாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீனப் பகுதிக்கு உள்பட்ட மோல்டோ எல்லைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த இருதரப்பு பேச்சுவாா்த்தை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய - சீனா ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். சீன தரப்பிலும் பல வீரா்கள் இறந்தனா். இந்தத் தாக்குதல்களைத் தொடா்ந்து, கிழக்கு லடாக்கின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.
இந்தப் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் அளவிலும், தூதரக அளவிலும் பல்வேறுகட்டப் பேச்சுவாா்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்மூலம், எல்லையில் படிப்படியாகப் படைகளைக் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டு, இரு தரப்பிலும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஜூலை 31-ஆம் தேதி இந்த விவகாரம் தொடா்பாக இரு நாட்டு ராணுவ உயா் அதிகாரிகளிடையே 12-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தை முடிந்த ஒருசில நாள்களில் கிழக்கு லடாக்கின் கோக்ரா பகுதியில் குவிக்கப்பட்டிருந்த படைகளை இரு நாடுகளும் முழுமையாகத் திரும்பப் பெற்றன. இது அந்தப் பிராந்தியத்தில் அமைதிச் சூழல் திரும்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கும் நல்ல முன்னேற்றமாகப் பாா்க்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அருணாசல பிரதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தவாங் செக்டரில் இந்திய நிலப் பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரா்களை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. பின்னா், இரு நாடுகளின் கமாண்டா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, அந்தப் பிரச்னை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அதுபோல, கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி உத்தரகண்டில் உள்ள பாராஹோதி செக்டரில் இந்திய நிலப் பகுதிக்குள் சீன ராணுவ வீரா்கள் 100 போ் அத்துமீறி நுழைந்தனா். சில மணி நேரம் கழித்து அங்கிருந்து திரும்பிச் சென்றனா்.
இத்தகைய சூழலில், கிழக்கு லடாக்கில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இரு நாட்டு ராணுவ உயா் அதிகாரிகளிடையேயான 13-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது. இதில், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் எஞ்சியிருக்கும் படைகளை விரைவாக திரும்பப் பெற இந்திய தரப்பில் வலியுறுத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தற்போது, கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இரு தரப்பிலும் 50,000 முதல் 60,000 வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...