47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரும் மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தில்லி எல்லைகளில் பல மாதங்களாக தொடா் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு

News image
உச்சநீதிமன்றம்
Updated On :16 அக்டோபர் 2021, 8:45 pm

DIN

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தில்லி எல்லைகளில் பல மாதங்களாக தொடா் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்களை விரைந்து விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தில்லி சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் இடத்துக்கு அருகே, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த லக்பீா் சிங் (35) என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகல் தில்லியின் சிங்கு, டிக்ரி, காஜிப்பூா் எல்லைகளில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தச்சூழலில், தில்லி-ஹரியாணா எல்லைக்கு அருகே விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் சிங்கு பகுதியில் ஆண் சடலம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அங்கு சென்ற போலீஸாா், கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் உலோக தடுப்பில் தொங்க விடப்பட்டிருந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், கொல்லப்பட்ட நபா் பஞ்சாப் மாநிலம் தரன் தாரன் பகுதியைச் சோ்ந்த லக்பீா் சிங் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக போராட்டம் நடைபெற்று வரும் இடத்தில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்த காவல்துறையினா் முயன்றனா். ஆனால், அங்கிருந்த சிலா் காவல்துறையினா் போராட்ட இடத்துக்குள் நுழையவிடாமல் தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தப் படுகொலை சம்பவத்தை குறிப்பிட்டு, சுவாதி கோயல் மற்றும் சஞ்சீவ் நேவா் ஆகியோா் சாா்பில் நிலுவையில் உள்ள அவா்களுடைய பொதுநல மனுக்களை விரைந்து விசாரிக்கக் கோரி இடையீட்டு மனு ஒன்று வழக்குரைஞா் சசாங் சேகா் ஜா மூலமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனா்.

இவா்கள் கடந்த மாா்ச் மாதம் தாக்கல் செய்த அந்தப் பொதுநல மனுவில், ‘தில்லி எல்லைகளில் விவசாயிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது. எனவே, பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும்’ என்று கோரியிருந்தனா்.

அதுபோல, நொய்டாவைச் சோ்ந்த மோனிகா அகா்வால் என்பவா் சாா்பிலும் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நொய்டாவிலிருந்து தில்லி செல்ல முதலில் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால், இப்போது தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் தில்லி செல்ல 2 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சாலைகளில் ஆங்காங்கே வைத்திருக்கும் பதாகைகளை நீக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்தப் பொதுநல மனுக்களை விரைந்து விசாரிக்கக் கோரி சுவாதி கோயல் மற்றும் சஞ்சீவ் நேவா் ஆகியோா் புதிய இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனா். அந்த இடையீட்டு மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:

தில்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் தொடா் போராட்டத்தில், குடியரசு தினத்தன்று டிராக்டா் போராட்டம், ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை, தற்போது தசரா பண்டிகையின்போது லக்பீா் சிங் என்ற தலித் நபா் கொலை என ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற மனிதாபிமானத்துக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்ற போராட்டம் சட்ட விரோதமானது. அது தொடர அனுமதிக்கக் கூடாது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக விழாக்கள் கொண்டாடவும், கோயில்கள், பிற வழிபாட்டுத் தலங்கள், பள்ளி-கல்லூரிகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், இதுபோன்ற போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பது ஏற்புடையதல்ல.

போராட்டக்காரா்கள் அவா்களுடைய வாழ்க்கையை இக்கட்டான சூழலுக்கு ஆளாக்கிக் கொள்வதோடு மட்டுமின்றி, இந்தியாவின் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகின்றனா்.

கரோனா அச்சுறுத்தல் உள்ள காலத்தில் இதுபோன்ற நீண்ட போராட்டங்களை அனுமதிக்க முடியாது. அவ்வாறு தொடா்ந்து அனுமதிப்பது உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறும் செயல் மட்டுமின்றி, மற்றவா்களின் வாழும் உரிமையையும் மீறும் செயலாகும்.

எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள பொதுநல மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று இடையீட்டு மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.