30-70 சதவீதம் வரை வேகமாக பரவும் டெல்டா கரோனா; அதிர்ச்சி தரும் புதிய ஆய்வு முடிவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தாலும் கூட டெல்டா வகை ஏற்கனவே வைரசில் இருந்து குணமடைந்தவரையும் தாக்கும் திறன் கொண்டது என்பதால் அதை முடிவுக்குக் கொண்டு வருவது சிக்கல் என்றே ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

டெல்டா வகை கரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட மற்ற வகைகளைக் காட்டிலும் 30 முதல் 70 சதவீதம் வரை வேகமாகப் பரவுவது சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா கரோனா குறித்த ஆய்வு ஒன்றின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், கரோனாவில் இருந்து மீண்ட நபர்களுக்கும் டெல்டா கரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம்,  தில்லியில் முதன்முதலில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு சில மாதங்களில் அது கட்டுக்குள் வந்தாலும் கூட, ஜூன், செப்டம்பர், நவம்பர் ஆகிய மாதங்களில் வைரஸ் அலை அலையாகத் தாக்கியது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் நிலைமை கை மீறி சென்றது.

அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு வெறும் 15 நாட்களில் 2 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்ந்தது. அந்த சமயத்தில் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 56.1 சதவிகிதமாக அதிகரித்தது. தில்லியில் வைரஸ் பாதிப்பு இந்தளவு அதிகமாக இருந்ததால், சீக்கிரம் சமூக தடுப்பாற்றல் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஒரு பகுதியில் குறிப்பிட்ட சதவிகிதம் பேருக்கு கரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் அங்கு சமூக தடுப்பாற்றல் உருவாகும். எந்தவொரு பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும் இதுபோன்ற சமூக தடுப்பாற்றல் என்பது மிக முக்கியம். ஆனால், தில்லியில் நடத்தப்பட்ட ஆய்வில் டெல்டா கரோனாவால் சமூக தடுப்பாற்றல் உருவாவது கடினமான விஷயமாக ஆகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கடந்த ஆண்டு ஜூன் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் அங்கு வைரஸ் அதிகரித்ததற்கும் உருமாறிய கரோனா வகைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள்தொகையில் எத்தனை பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பதைக் கண்டறிய சிரோ சர்வே அவ்வப்போது நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட சிரோ சர்வே-இல் 42 சதவிகிதம் பேருக்கு கரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டது. 

சில மாதங்கள் கழித்து 2ஆம் அலை முடிந்த பிறகு, இந்த சிரோ சர்வே நடத்தப்பட்ட போது, 88 பேருக்கு கரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தாலும் கூட டெல்டா வகை ஏற்கனவே வைரசில் இருந்து குணமடைந்தவரையும் தாக்கும் திறன் கொண்டது என்பதால் அதை முடிவுக்குக் கொண்டு வருவது சிக்கல் என்றே ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com