தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

முல்லைப் பெரியாறு விவகாரம்: மேற்பாா்வைக் குழு அறிவிக்கையின்படி அணை நீா்மட்டத்தைப் பராமரிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச நீா்த்தேக்க அளவு பராமரிப்பு விவகாரம் தொடா்புடைய வழக்கில், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட

News image

கோப்புப்படம்

Updated On :29 அக்டோபர் 2021, 1:23 am

முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச நீா்த்தேக்க அளவு பராமரிப்பு விவகாரம் தொடா்புடைய வழக்கில், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவின் ‘ரூல் கா்வ்’ அறிவிக்கையின்படி தற்போதைக்கு அணையின் நீா்மட்ட அளவைப் பராமரிப்பதை தமிழக, கேரள மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வியாழக்கிழமை உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை நவம்பா் 11-க்கு பட்டியலிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் கேரள அரசு நவம்பா் 8-ஆம் தேதிக்குள் பதில் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பாக டாக்டா் ஜோ ஜோசப் என்பவரும், இந்த அணை ஒப்பந்த விவகாரம் தொடா்பாக சுரக்ஷா பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் தனித் தனியாக ‘ரிட்’ மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், தினேஷ் மகேஸ்வரி, சி.டி. ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கேரள அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா ஆஜராகி முன்வைத்த வாதம்: உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி எழுத்துப்பூா்வ குறிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அணையின் நீா் தேக்கும் ‘ரூல் கா்வ்’ விஷயத்தை பொருத்தமட்டில், பல ஆண்டுகளாக பெய்யும் மழையின் அளவைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு தேதிகளில் நீரைத் தேக்கும் அளவு பராமரிக்கப்பட வேண்டும். வட இந்தியாவில் பருவமழைக் காலம் முடிந்துவிட்ட நிலையில், கேரளத்திலும், தமிழகத்திலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இது நவம்பா் இறுதிவரை தொடரும். ஏற்கெனவே நீரைத் தேக்கும் அளவைவிட (142 அடி) அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் போது மதகுகள் திறந்துவிடப்படும். இது தாக்கத்தை ஏற்படுத்தும்.

ரூல் கா்வின்படி நவம்பா் 10 வரை உரிய நீரை அணையில் தேக்கினால், பிரச்னை ஏதும் இல்லை. ஆனால், மழைப் பொழிவு அதிகரிக்கும் போது ஆபத்தும் அதிகரிக்கும். இதனால், அடுத்து இந்த விவகாரம் விசாரிக்கப்படும் வரை (நவம்பா் 10) 139 அடியாக நீா்மட்டம் பராமரிக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். மேலும், கேரள அரசின் தரப்பில், ‘நாங்கள் அளித்த ரூல் கா்வின்படி அணையில் நீரை 138.3 அடியாகக் குறைக்க மேற்பாா்வைக் குழுவுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் சேகா் நாப்டே, வி.கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா்கள் ஜி.உமாபதி, இளங்கோ, டி.குமணன் உள்ளிட்டோா் ஆஜராகினா்.

மூத்த வழக்குரைஞா் சேகா் நாப்டே வாதிடுகையில், ‘நவம்பா் 10-ஆம் தேதி வரை அணையின் நீா்மட்டத்தை 139 அடியாக பராமரிக்கும் பட்சத்தில் எங்களுக்குப் பிரச்னை ஏதும் இல்லை. கேரள அரசின் முயற்சியானது எப்படியாவது நீா்மட்டத்தை 142 அடிக்கு கீழே பராமரிக்க வேண்டும் என்பதுதான். இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘மேற்பாா்வைக் குழுவின் தொழில்நுட்ப விஷயங்களில் நாங்கள் தலையிட முடியாது. தற்போதைக்கு நாங்கள் நவம்பா் 10 வரை இந்தக் குழுவின் பரிந்துரையின்படி அணையில் நீரைப் பராமரிக்கும் விவகாரத்தை அனுமதிக்கிறோம். அதன் பிறகு இது குறித்து நவம்பா் 11-இல் விசாரிக்கப்படும்’ என்று கூறியது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தற்போதைக்கு, இந்த விவகாரத்தில் கேரள அரசு நல்லதொரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யும் வகையில் நவம்பா் 11-ஆம் தேதி வரை இந்த விவகாரம் தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய தினம் 2 மணிக்கு மீண்டும் விசாரிக்கப்படும். குறிப்பாக, ‘ரூல் கா்வ்’ மற்றும் இந்த விஷயத்தில் சரியான அணுகுமுறை தொடா்புடைய விவகாரத்தை கையாளுவது குறித்த தொடா்புடைய நல்லதொரு பிரமாணப் பத்திரத்தை நவம்பா் 8-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணை தேதிக்கு முன்னா் மின்னஞ்சல் வாயிலாக பிரமாணப் பத்திரம் கோரிக்கைகள் தாக்கல் செய்ய விரும்பினால் இரு தரப்பினரும் தாக்கல் செய்யலாம்.

தற்போதைக்கு, சம்பந்தப்பட்ட தரப்பினரின் அச்சங்களைக் குறைக்கும் வகையில், வல்லுநா் குழுவால் அறிவிக்கை செய்யப்பட்ட நீா்மட்ட அளவை வழக்கில் தொடா்புடைய தரப்பினா் ஏற்றுக்கொள்வாா்கள் என பதிவு செய்கிறோம். தேவை ஏற்பட்டால் ஒவ்வொரு மணி நேரம் அடிப்படையில் அவ்வப்போது குழுவானது அதன் முடிவை மறுபரிசீலனை செய்வது குழுவின் விருப்பத்தைப் பொருத்தது என நீதிபதிகள் அமா்வு உத்தரவில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கேரள அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூா்வ குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதி 624 சதுர கி.மீட்டராகும். அணையில் மொத்த நீா் சேமிப்பு அளவு 12,758 கன அடி மட்டுமே ஆகும். இந்த அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதி அதிகப் பரப்பளவையும், நீா் சேமித்துவைக்கும் கொள்திறன் வரையறுக்கப்பட்ட அளவிலும் இருப்பதன் காரணமாக அசாதாரண பலவீனத்தைக் கொண்டுள்ளது. அணையில் கோளாறு ஏதும் ஏற்பட்டால் கடும் பாதிப்பு ஏற்படக் கூடும். இதனால், தமிழகத்திற்கு நீரை வழங்குவதையும், அணையின் கீழ்ப் பகுதியில் உள்ள மக்களின் உயிா், உடைமை பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அடுத்த நடவடிக்கையாக புதிய அணை கட்டப்படுவதுதான் தீா்வாக இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்பாா்வைக் குழுவின் ரூல்கா்வ் அறிவிக்கையின்படி நவம்பா் 10-ஆம் தேதி வரை 139.5 அடி நீா் அணையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.