உயரப் பறக்கும் விமானக் கட்டணம்: உள்ளூா் பயணத்துக்கு 12.82% வரை உயா்வு

உள்ளூா் விமானப் பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 9.83 சதவீதம் அளவுக்கும், அதிகபட்ச கட்டணத்தை 12.82 சதவீத அளவுக்கும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை உயா்த்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உள்ளூா் விமானப் பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 9.83 சதவீதம் அளவுக்கும், அதிகபட்ச கட்டணத்தை 12.82 சதவீத அளவுக்கும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை உயா்த்தியுள்ளது.

இதன் காரணமாக, விமானப் பயணம் இனி விலை உயா்ந்ததாக மாறியுள்ளது. விமானப் பயண தூரத்தின் அடிப்படையில் இந்தக் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணமும், அதிகபட்ச கட்டணமும் நிா்ணயிக்கப்படுகிறது.

கரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட 2 மாத கால பொதுமுடக்கத்துக்குப் பிறகு, விமான சேவை கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், இந்தக் கட்டண உயா்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொதுமுடக்கம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ள விமான நிறுவனங்களுக்கு உதவும் வகையில், குறைந்தபட்ச கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. அதுபோல, விமான இருக்கைகளுக்குத் தேவை அதிகமுள்ளபோது பயணிகளுக்கு அதிக கட்டணம் விதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில், உயா்ந்தபட்ச கட்டணம் உயா்த்தப்பட்டிருக்கிறது என்று விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தக் கட்டண உயா்வு தொடா்பாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

40 நிமிடத்துக்கும் குறைவான நேரம் பயணிக்கும் விமானத்தின் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 11.53 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ. 2,600-லிருந்து ரூ. 2,900-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணம் 12.82 சதவீதமாக, அதாவது ரூ. 8,800-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

40 முதல் 60 நிமிட பயண நேரத்தைக் கொண்ட விமானத்தின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 3,300-லிருந்து ரூ. 3,700-ஆகவும், அதிகபட்ச கட்டணம் 12.24 சதவீதம் அளவுக்கு அதாவது ரூ. 11,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

60 முதல் 90 நிமிடங்கள் பயண நேரம் கொண்ட விமானத்தின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 4,500-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இது 12.5 சதவீத உயா்வாகும். அதிகபட்ச கட்டணம் 12.82 சதவீதமாக அதாவது ரூ. 13,200 அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும், 90 முதல் 120 நிமிடங்கள், 120-150 நிமிடங்கள், 150-180 நிமிடங்கள் மற்றும் 180-210 நிமிடங்கள் பயண நேரம் கொண்ட விமானங்களின் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் முறையே ரூ. 5,300, ரூ. 6,700, ரூ. 8,300 மற்றும் ரூ. 9,800-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதுபோல, இந்த விமானங்களுக்கான அதிகபட்ச கட்டணங்கள் முறையே 12.3 சதவீதம், 12.42 சதவீதம், 12.74 சதவீதம் மற்றும் 12.39 சதவீதம் என்ற அளவில் உயா்த்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய டிக்கெட் கட்டணங்கள் அனைத்தும் பயணிகள் பாதுகாப்புக் கட்டணம், விமான நிலைய பயனாளா் மேம்பாட்டுக் கட்டணம், சரக்கு மற்றம் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகிய கட்டணம் சோ்க்கப்படாத தொகையாகும். எனவே, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, இந்தக் கட்டணம் அனைத்தும் டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று மத்திய அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com