பயங்கரவாத்தைத வேரிலிருந்து ஒழிக்க நடவடிக்கை; பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய ராஜ்நாத் சிங்

"தெற்காசியாவின் வரலாறு மற்றும் புவியியல் இரண்டையும் மாற்றியதில் இந்த போருக்கும் இந்தியப் படைகளுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது"
ராஜ்நாத் சிங் (கோப்புப் படம்)
ராஜ்நாத் சிங் (கோப்புப் படம்)

கடந்த 1971ஆம் ஆண்டு, இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நடைபெற்ற போரின் காரணமாக வங்கதேசம் உருவானது. கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதிக்கு, இந்தியாவின் ராணுவ நடவடிக்கை விடுதலை பெற்று தந்தது. 

இந்த போரில் இந்தியா பெற்ற வரலாற்று வெற்றியின் 50ஆம் ஆண்டு நினைவு கூறும் வகையிலும் இந்திய, வங்கதேச நட்புறவைக் குறிக்கும் நோக்கிலும் இந்திய கேட் பகுதியில் ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் கொண்டாட்டம் நடைபெற்றது. 

இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு கூறுகையில், "இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கப் பாகிஸ்தான் விரும்புகிறது. 1971ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் திட்டங்களை இந்திய ராணுவம் முறியடித்தது. இப்போது பயங்கரவாத்தைத வேரிலிருந்து ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வங்கதேசத்தில் ஜனநாயகத்தை நிறுவுவதற்கு இந்தியா பங்களித்துள்ளது. இன்று இந்தியா மற்றும் வங்கதேசம் நாடுகளுக்கு இடையே மிகச் சிறப்பான ஒரு உறவு உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில், வங்கதேசம் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. இது உலகின் பிற நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. 

1971ஆம் ஆண்டு, இந்திய, பாகிஸ்தான் போரை வென்ற 50ஆவது ஆண்டு கொண்டாட்டத்திற்காக நாம் இன்று இந்தியா கேட் பகுதியில் கூடியிருக்கிறோம். தெற்காசியாவின் வரலாறு மற்றும் புவியியல் இரண்டையும் மாற்றியதில் இந்த போருக்கும் இந்தியப் படைகளுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இந்த புகழ்பெற்ற வெற்றியை இந்த விழா நினைவுபடுத்துகிறது. 

இந்த நிகழ்வைப் பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது, ஆனால் நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் திடீர் மறைவுக்குப் பிறகு, இதை எளிமையாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சந்தர்ப்பத்தில், நான் அவரது சாதனைகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். இந்த நாளில், 1971 போரில் வெற்றி பெற்ற இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு வீரரின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். அந்தத் துணிச்சலான வீரர்களின் தியாகத்திற்கு இந்த நாடு எப்போதும் கடமைப்பட்டிருக்கும்.

நமது வங்காள சகோதரர்கள் அப்படி என்ன தவறாகச் செய்தார்கள் என சில சமயங்களில் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர்கள் தங்கள் உரிமைகளைக் கோரினர். அவர்கள் தங்கள் கலை, கலாசாரம் மற்றும் மொழியைப் பாதுகாக்க முயன்றனர். அரசியல் மற்றும் ஆட்சியில் அவருக்கு உரியப் பிரதிநிதித்துவம் தேவை என்று வலியுறுத்தினர். 

அந்த சமயத்தில் நமது வங்காள சகோதரர்கள் மீதான அநீதி மற்றும் அட்டூழியங்கள் ஒட்டுமொத்த மனிதக்குலத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்தது. அத்தகைய சூழ்நிலையில், அநீதி மற்றும் சுரண்டலில் இருந்து அன்றைய கிழக்கு பாகிஸ்தானின் மக்களின் விடுதலைக்கு உதவியது நமது ராணுவம் தான்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com