தில்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

தில்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் தலைநகர் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் ஒருபகுதியாக குடியரசு நாளான இன்று தில்லியில் விவசாயிகள் இணைந்து மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெடுக்கின்றனர். இதில் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 100 கிமீ தூரத்துக்கு பேரணியில் ஈடுபடுகின்றனர். 

குடியரசு தினத்தை முன்னிட்டு கட்டுப்பாடுகளுடன் போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்தனர். காலை 11.30 மணியளளவில் பேரணியைத் துவங்கவிருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்த நிலையில் இன்று காலை 8 மணிக்கே திக்ரி எல்லையில் போராட்டத்தைத் துவங்கினர். திக்ரி எல்லையில் போலீஸாரின் தடுப்புகளைத் தகர்த்துவிட்டு பேரணியைத் தொடங்கியதால் காவல்துறையினர் குவிந்தனர். 

பின்னர் சிங்கு எல்லையில் இருந்து தில்லிக்குள் டிராக்டர்களுடன் விவசாயிகள் நுழைந்துள்ளனர். சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதிக்கு வந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே தில்லிக்குள் நுழைந்ததாகக் கூறி விவசாயிகளை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com