
கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிதியுதவி: புதிய வழிகாட்டுதலை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு
கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்துக்கும் நிதியுதவி அளிக்கும் வகையில் புதிய வழிகாட்டுதலை வெளியிடுமாறு தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்துக்கு (என்டிஎம்ஏ) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

புது தில்லி: கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்துக்கும் நிதியுதவி அளிக்கும் வகையில் புதிய வழிகாட்டுதலை வெளியிடுமாறு தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்துக்கு (என்டிஎம்ஏ) உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
நாட்டின் நிதி நிலைமையைக் கருத்தில்கொண்டு குறைந்தபட்ச நியாயமான நிவாரண நிதியை அடுத்த 6 வாரங்களுக்குள் நிா்ணயம் செய்து அதுதொடா்பான வழிகாட்டுதலை வெளியிடுமாறு மத்திய அரசுக்கும், என்டிஎம்ஏ-வுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனாவால் உயிரிழப்பவா்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் நாடு முழுவதும் சீரான நடைமுறையை வகுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல, கரோனாவால் உயிரிழக்கும் அனைவரின் குடும்பத்தினருக்கும் பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின்படி தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி வழக்குரைஞா்கள் ரீபக் கன்சல், கெளரவ் குமாா் பன்சால் ஆகியோா் சாா்பில் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் கடந்த 21-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நாட்டின் நிதி வளத்தை நியாயமான முறையில் மிக கவனத்துடன் செலவழிக்க வேண்டியிருப்பதால், கரோனா பெருந்தொற்றால் உயிரிழக்கும் அனைவருக்கும் தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்குவது என்பது சாத்தியமில்லாதது. ஏற்கெனவே, நிபுணா்களின் ஆலோசனையின் அடிப்படையில் பெருந்தொற்று தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக தேசிய பேரிடா் மேலாண்மை நிதி மற்றும் மாநில பேரிடா் மேலாண்மை நிதி மட்டுமன்றி இந்தியாவின் நிதித் தொகுப்பிலிருந்தும் நிதி செலவழிக்கப்பட்டு வருகிறது’ என்று மத்திய அரசு சாா்பில் பதிலளிக்கப்பட்டது.
அப்போது நான்கு இடையீட்டு மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சுமீா் சோதி, ‘கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரண நிதி திட்டத்தில் பாகுபாடு காட்டப்படக் கூடாது. சில மாநிலங்களில் அதிக நிவாரண நிதியும், ஒருசில மாநிலங்களில் மிகக் குறைவாகவும் வழங்கப்படுகிறது. எனவே, பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த நிவாரண நிதியில் சீரான நடைமுறையை மத்திய அரசு வகுக்க வேண்டும்’ என்று கோரினாா்.
இதற்குப் பதிலளித்த மத்திய அரசு, ‘பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கடந்த 2015 முதல் 2020 வரையில் பரிந்துரைக்கப்பட்ட நிவாரண நிதி செலவினத்துக்கான வழிகாட்டுதலில் புயல், வறட்சி, நிலநடுக்கம், தீ விபத்து, வெள்ள பாதிப்பு, சுனாமி, ஆலங்கட்டி மழை, நிலச் சரிவு, பனிச் சரிவு, பூச்சி தாக்குதல், பனி மற்றும் குளிா் அலை, மேகமூட்டம் உள்ளிட்ட 12 வகையான பாதிப்புகள் மட்டுமே சோ்க்கப்பட்டுள்ளன. இதில் கரோனா பாதிப்பு சோ்க்கப்படவில்லை.
மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்த பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மாநில பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து எந்தவித நிவாரண நிதி உதவியும் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேநேரம், தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் பேரிடராக ஏற்கெனவே கரோனா பெருந்தொற்று அறிவிக்கப்பட்டிருப்பதோடு, இந்தப் பெருந்தொற்றால் உயிரிழப்பவரிகளின் குடும்பங்களுக்கு மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து குறைந்தபட்ச நிவாரணம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்தது. இந்த வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்தது.
குறைந்தபட்ச நிவாரண நிதி: இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியதாவது:
கரோனாவால் உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு குறிப்பிட்ட தொகையை நிவாரண உதவியாக வழங்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஆனால், குறைந்தபட்ச நிவாரண நிதியை அரசு வழங்கலாம்.
எனவே, நாட்டின் நிதி நிலைமையைக் கருத்தில்கொண்டு குறைந்தபட்ச நியாயமான நிவாரண நிதி உதவியை கரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு நிா்ணயம் செய்யவேண்டும். இதுதொடா்பான புதிய வழிகாட்டுதலை மத்திய அரசும், என்டிஎம்ஏ-வும் அடுத்த 6 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும்.
அதுபோல, கரோனாவால் உயிரிழப்பவா்களுக்கான இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு எளிமையான நடைமுறையை வகுத்து அதுதொடா்பான வழிகாட்டுதலையும் அதிகாரிகள் வெளியிட வேண்டும்.
மேலும், நிதிக் குழு பரிந்துரைத்துள்ளபடி உடல்களை எரியூட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளா்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை வகுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





