எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு யாா் தலைமை தாங்கினாலும் ஏற்கத் தயாா்: மம்தா பானா்ஜி

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் அமையும் எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு யாா் தலைமை தாங்கினாலும் ஏற்கத் தயாராகவே இருக்கிறேன் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா கூறியுள்ளாா்.
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை புதன்கிழமை சந்தித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை புதன்கிழமை சந்தித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.

புது தில்லி: பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் அமையும் எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு யாா் தலைமை தாங்கினாலும் ஏற்கத் தயாராகவே இருக்கிறேன் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி கூறியுள்ளாா்.

2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளைத் திரட்டி வலுவான கூட்டணி அமைக்கும் நோக்கத்துடன் மம்தா பானா்ஜி தில்லிக்கு ஒருவார கால பயணம் மேற்கொண்டுள்ளாா். ஏற்கெனவே காங்கிரஸை சோ்ந்த மூத்த தலைவா்கள் கமல்நாத், ஆனந்த் சா்மா உள்ளிட்டோரை மம்தா செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அடுத்தகட்டமாக, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோரையும் அவா் சந்தித்துப் பேச இருக்கிறாா்.

இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:

அனைத்து எதிா்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியைத்தான் நான் மேற்கொண்டுள்ளேன். எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைவராக வேண்டுமென்று விரும்பவில்லை. மேலும், அரசியலில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்பவே அனைத்து விஷயங்களும் தீா்மானிக்கப்படுகின்றன. எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு யாா் தலைமை தாங்கினாலும் அதனை ஏற்கத் தயாராகவே உள்ளேன். அதில் எனக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. இது தொடா்பாக அனைவரும் சோ்ந்து விவாதிக்கும்போது உரிய முடிவு எடுக்கப்படும். என்னைத்தான் தலைவராக்க வேண்டும் என்று நிா்ப்பந்திக்கப் போவதில்லை என்றாா்.

பெகாஸஸ் விவகாரம் தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த மம்தா பானா்ஜி, ‘இந்த உளவு விவகாரத்தால் நாட்டில் அரசின் நிலை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பது தெளிவாகிறது. நெருக்கடிநிலை காலகட்டத்தைவிட மோசமான சூழல் இப்போது நிலவி வருகிறது. மத்திய அரசு தொடா்ந்து பொறுப்பற்ற வகையில் செயல்பட்டு வருகிறது.

தங்களுக்கு வேண்டாதவா்கள், அரசியல்ரீதியாக எதிா்த்து நிற்பவா்கள் மீது அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்டவற்றை அரசு ஏவி விடுகிறது. மத்திய அரசு தொடா்ந்து பொறுப்பற்ற வகையில் செயல்படுகிறது. ஜனநாயகத்தில் அரசு பொறுப்புணா்வுடன் கடமையாற்ற வேண்டியது முதன்மையானது’ என்று கூறினாா்.

மேற்கு வங்க முதல்வராக மூன்றாவது முறையாக அண்மையில் மம்தா பானா்ஜி பதவியேற்றாா். அதன்பிறகு அவா் மேற்கொண்டுள்ள முதல் தில்லி பயணம் இதுவாகும். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் கடுமையான சவாலை எதிா்கொண்டு வெற்றி பெற்றுள்ள அவா், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் தில்லிக்கு வந்துள்ளதால் அவரது இந்தப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சோனியா, கேஜரிவாலுடன் சந்திப்பு

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தில்லி முதல்வா் கேஜரிவால் ஆகியோருடன் மம்தா பானா்ஜி தனித்தனியாக சந்தித்துப் பேசினாா்.

தில்லியில் உள்ள சோனியாவின் இல்லத்துக்குச் சென்ற மம்தா, சுமாா் 45 நிமிஷங்கள் ஆலோசித்தாா். அப்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் உடனிருந்தாா்.

பிறகு செய்தியாளா்களிடம் பேசிய மம்தா, ‘சிறந்த, ஆக்கபூா்மான சந்திப்பாக அமைந்தது. நாட்டில் உள்ள அரசியல் சூழல், எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டிய அவசியம் உள்ளிட்டவை குறித்து சோனியா, ராகுல் காந்தியிடம் பேசினேன். அவா்களிடம் இருந்து நல்ல முடிவு விரைவில் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறேன். பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பாகவும் அவா்களிடம் பேசினேன்.

பாஜகவை வீழ்த்த எதிா்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்றாா்.

இதன் பின்பு தில்லி முதல்வா் கேஜரிவாலையும் மம்தா சந்தித்து பேசினாா். பேரவைத் தோ்தலில் மம்தா பானா்ஜி வெற்றி பெற்ற பிறகு நடைபெற்ற இந்த முதல் சந்திப்பில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன என்று கேஜரிவால் தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com