
வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி மீதே இப்படி ஒரு வழக்கு
புது தில்லி: சிபிஐயில் பணியாற்றி வரும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரஜேஷ் குமார் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.94 கோடி அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக இவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது பெற்றோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு சிறந்த விசாரணை அதிகாரி என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது பெற்றவரான பிரஜேஷ் குமார், சிபிஐ துறையில் வங்கி முறைகேடுகள், வங்கிப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வந்தார்.
பிரஜேஷ் குமார் 2018 - 2021ஆம் ஆண்டுக்குள் தனது பெயரிலும், தனது பெற்றோர் பெயரிலும் ரூ.2.09 கோடி அளவுக்கு பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெங்களூருவில் கடந்த 2020ஆம் ஆண்டில் 9 மாத இடைவெளியில், பிரஜேஷ் பிரஸ்டீஜ் ராயல் கார்டனில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ரூ.1.91 கோடி மதிப்புள்ள இரண்டு வீடுகளை வாங்கியது குறித்து சிபிஐக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது அவர்களது வருமானத்தை விட 302 சதவீதம் அதிக சொத்து. இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் அளித்த பதிலில் திருப்தி இல்லாததால், சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.