விவசாயிகளை வசைபாடுவது எல்லோருக்கும் ஃபேஷன் ஆகிவிட்டது: உச்ச நீதிமன்றம்

கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்த மத்திய அரசு, பஞ்சாப் மாநில அரசும் தங்களின் நடவடிக்கைகளை விரைப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கடந்த ஒரு வாரமாக, தில்லியிலும் அதை சுற்றியுள்ள நகரங்களிலும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. தேசிய தலைநகரில் வெள்ளிக்கிழமையன்று காற்றின் தரம் பல மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமாக மாறியது. இதையடுத்து, மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், தில்லி காற்று மாசு குறித்து அவசர திட்டம் வகுக்க மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா, "நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் கூட, நாங்கள் முக கவசத்தை அணிந்து தான் இருக்கிறோம்.

அவசர கால நடவடிக்கைகளை எடுக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்பதை சொல்லுங்கள். இரண்டாவது முறையாக ஊரடங்கை அமல்படுத்த போகிறீர்களா? காற்றின் தரக் குறியீட்டை குறைக்க என்ன திட்டம் உங்களிடம் உள்ளது" என கேள்வி எழுப்பினார்.

கேள்விக்கு பதில் அளித்த மத்திய அரசு சார்பு வழக்கறிஞர், "பஞ்சாப், ஹரியாணா உள்பட மத்திய, மாநில அரசுகளுக்கிடையே இன்று அவசர கூட்டம் நடைபெறவுள்ளது" என்றார்.

இதை கேட்ட ரமணா, "அரசின் (மத்திய அல்லது மாநிலங்களின்) பொறுப்பைத் தாண்டிச் சென்று பிரச்னையைப் பாருங்கள். குறைந்தபட்சம் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு நாம் நன்றாக இருக்க ஏதாவது நடக்க வேண்டும்" என்றார்.

இதற்கு பதலளித்த மாநில அரசு சார்பு வழக்கறிஞர், "தில்லி காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 20 சிகரெட் பிடிப்பது போல உள்ளது. நிலைமையின் தீவிரத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்" என்றார்.

விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உறுதி அளித்த மத்திய அரசு, பஞ்சாப் மாநில அரசும் தங்களின் நடவடிக்கைகளை விரைப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டது. இதுகுறித்த வாதங்களை எடுத்துரைத்த மத்திய அரசு சார்பு வழக்கறிஞர், "மரக்கன்றுகள் எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், கடந்த ஐந்தாறு நாட்களில், பஞ்சாபில் மரக்கன்றுகள் எரிப்பதால், மாசு ஏற்பட்டதைக் கண்டோம். மாநில அரசு தலையிட வேண்டும்" என்றார்.

இந்த வாதத்தை கேட்ட ரமணா, "விவசாயிகளால் மாசு ஏற்படுகிறது என்பதை போல ஏன் கூறுகிறீர்கள்? விவசாயிகளால் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே மாசு ஏற்படுகிறது. மீதமுள்ளவை பற்றி என்ன சொல்கிறீர்கள்? தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த என்ன செய்கிறீர்கள்? உங்கள் சரியான திட்டம் என்னவென்று எங்களிடம் கூறுங்கள்" என்றார்.

இதையடுத்து பேசிய நீதிபதி சூர்யகாந்த், "விவசாயிகளை வசைபாடுவது எல்லோருக்கும் ஃபேஷன் ஆகிவிட்டது. நீங்கள் பட்டாசுக்கு தடை விதித்தீர்கள். ஆனால் கடந்த 5-6 நாட்களாக என்ன நடக்கிறது" என்றார்.

பின்னர், இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com