நாட்டிலேயே பிகாரில் அதிக ஏழைகள்

நாட்டிலேயே பிகாா் மாநிலத்தில் அதிக சதவீதத்திலான ஏழைகள் உள்ளதாக நீதி ஆயோக் வெளியிட்ட பலபரிமாண வறுமைக் குறியீட்டுப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டிலேயே பிகாா் மாநிலத்தில் அதிக சதவீதத்திலான ஏழைகள் உள்ளதாக நீதி ஆயோக் வெளியிட்ட பலபரிமாண வறுமைக் குறியீட்டுப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மாநிலங்களில் காணப்படும் வறுமை நிலை குறித்து நீதி ஆயோக் ஆய்வு நடத்தியது. அதனடிப்படையில், தேசிய பலபரிமாண வறுமைக் குறியீட்டுப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 51.91 சதவீத ஏழை மக்களுடன் பிகாா் முதலிடத்தில் உள்ளது.

42.16 சதவீத ஏழைகளுடன் ஜாா்க்கண்ட் 2-ஆவது இடத்திலும், 37.79 சதவீத ஏழைகளுடன் உத்தர பிரதேசம் 3-ஆவது இடத்திலும் உள்ளன.

இந்தப் பட்டியல் தொடா்பாக நீதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆக்ஸ்ஃபோா்டு வறுமை-மனித வளா்ச்சி முன்னெடுப்பு, ஐ.நா. வளா்ச்சித் திட்டம் உள்ளிட்டவை வகுத்த வழிமுறைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு குடும்பங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின்போது மக்களின் ஊட்டச்சத்து, குழந்தை உயிரிழப்பு விகிதம், பேறுகாலத்துக்கு முந்தைய பராமரிப்பு, கல்வி கற்கும் ஆண்டுகள், பள்ளி வருகை சதவீதம், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள், குடிநீா், மின்சாரம், வீட்டுவசதி, சொத்துகள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறியப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்கை வகுப்பில் முக்கியப் பங்கு: அறிக்கையின் முன்னுரையில் நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா், ‘தேசிய பலபரிமாண வறுமைக் குறியீடு, அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். வறுமை குறித்து பல்வேறு பரிமாணங்களில் திரட்டப்படும் தரவுகள், மக்கள் நலத் திட்டங்களை வகுப்பதற்கு அடிப்படையாக இருக்கும்.

இதன்மூலமாக அரசின் திட்டங்கள் அனைவருக்கும் சென்று சோ்வது உறுதி செய்யப்படும். கடந்த 2015-16-இல் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின் (என்எஃப்ஹெச்எஸ்) தரவுகள், பலபரிமாண வறுமைக் குறியீட்டைக் கணக்கிடுவதற்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்டன’ என்று தெரிவித்துள்ளாா்.

மாநிலங்கள் ஏழை மக்களின் சதவீதம்

பிகாா் 51.91

ஜாா்க்கண்ட் 42.16

உத்தர பிரதேசம் 37.79

மத்திய பிரதேசம் 36.65

மேகாலயம் 32.67

அஸ்ஸாம் 32.67

சத்தீஸ்கா் 29.91

ராஜஸ்தான் 29.46

ஒடிஸா 29.35

நாகாலாந்து 25.23

அருணாசல் 24.27

மேற்கு வங்கம் 21.43

குஜராத் 18.60

மணிப்பூா் 17.89

உத்தரகண்ட் 17.72

திரிபுரா 16.65

மகாராஷ்டிரம் 14.85

தெலங்கானா 13.74

கா்நாடகம் 13.16

ஆந்திரம் 12.31

ஹரியாணா 12.28

மிஸோரம் 9.80

ஹிமாசல் 7.62

பஞ்சாப் 5.59

தமிழ்நாடு 4.89

சிக்கிம் 3.82

கோவா 3.76

கேரளம் 0.71

யூனியன் பிரதேசம் ஏழை மக்களின் சதவீதம்

தாத்ரா-நகா் ஹவேலி 27.36

ஜம்மு-காஷ்மீா், லடாக் 12.58

டாமன்-டையு 6.82

சண்டீகா் 5.97

தில்லி 4.79

அந்தமான்-நிகோபா் தீவுகள் 4.30

லட்சத்தீவுகள் 1.82

புதுச்சேரி 1.72

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com