
‘லக்கிம்பூர் வன்முறையில் மத்திய அமைச்சரின் மகன் விரைவில் கைது’
லக்னெள: லக்கிம்பூர் வன்முறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக உத்தரப் பிரதேச காவல்துறை ஐ.ஜி. லட்சுமி சிங் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், கொலை, வன்முறை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து லக்னெள ஐ.ஜி. லட்சுமி சிங் கூறுகையில்,
“லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பான வழக்கில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய தேடி வருகின்றோம். அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆஷிஷ் மிஸ்ராவை தேடும் அதேவேளையில், சமூக ஊடகங்களில் பரவிவரும் விடியோ மற்றும் தகவல்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.”
இதற்கிடையே, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள லக்கிம்பூர் வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் அவரது தந்தை மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் வன்முறை நடந்த இடத்தில் இல்லை என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.