மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா(கோப்புப்படம்)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா(கோப்புப்படம்)

பிரதமர் மோடி சர்வாதிகாரியா? அமித் ஷாவின் பதில் என்ன?

அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசுக்கு சொந்தமான சன்சாட் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பிரதமர் மோடி சில நேரங்களில் சர்வாதிகாரி போல் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறதே என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "நான் அவருடன் நீண்ட காலமாக உடன் இருந்துவருகிறேன். அவரை போல நாம் பேசுவதை கவனிப்பவரை நான் பார்த்ததே இல்லை" என்றார்.

பின்னர், விரிவாக பேசிய அவர், "எங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. நாம் பேசுவதை மோடி போன்று உன்னிப்புடன் கேட்பவரை நான் பார்த்ததில்லை. பிரச்னையை விவாதிக்கும் வகையில் கூட்டப்படும் கூட்டத்தில், மோடி குறைவாகவே பேசுவார். பொறுமையாக அனைவரையும் கேட்டு முடிவெடுப்பார். இவ்வளவு யோசிக்க என்ன இருக்கிறது? என்று நாம் அடிக்கடி நினைப்போம். ஆனால், அவர் 2-3 கூட்டங்களுக்குப் பிறகே பொறுமையாக ஒரு முடிவை எடுப்பார்.

ஆலோசனைகளின் தரத்தின் அடிப்படையிலேயே அவர்கள் அளிக்கும் பரிந்துரைக்கு மோடி முக்கியத்துவம் அளிக்கிறார். அந்த நபர் யார் என்ற அடிப்படையில் அல்ல. எனவே, அவர் பிரதமராக தனது முடிவுகளை திணிக்கிறார் என்று சொல்வது உண்மையில்லை. அவருடன் பணிபுரிந்தவர்கள், விமர்சகர்கள் கூட அமைச்சரவை இதுபோன்ற ஜனநாயக முறையில் செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொள்வார்கள்" என்றார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய அவர், "மொத்தம், 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு வருடத்திற்குள் 1.5 லட்சம் கோடி விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஐக்கிய முற்போக்கு அரசு 60,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது.

ஆனால், விவசாயிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், இந்த 1.5 லட்சம் கோடி ரூபாய் நிதி விவசாயிகளுக்கு நேரடியாக செல்கிறது, இது வங்கி கடன் மூலம் தரப்படவில்லை. விவசாயத்திற்கு என சராசரியாக 1.5 - 2 ஏக்கரின் நிலங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலத்திற்கான அறுவடை பணம் 6,000 ரூபாய் ஆகும். எனவே, விவசாயிகளிடம் கடன் வாங்கப்படவில்லை" என்றார்.

குஜராத்தை சேர்ந்த பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்ததிலிருந்து ஒன்றாக பணியாற்றிவருகிறார்கள். முன்னதாக, குஜராத முதலமைச்சராக மோடி பொறுப்பு வகித்தபோது, அமித் ஷா பல முக்கிய துறைகளின் அமைச்சராக பொறுப்பு வகித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com