
பத்ரிநாத் நெடுஞ்சாலையில் நிலச்சரிவுக்கு நடுவே சிக்கிய வாகனத்தை மீட்கும் மீட்புப் படையினர்.
உத்தரகண்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சாமோலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பத்ரிநாத்துக்கு பயணம் மேற்கொள்பவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பத்ரிநாத்திலிருந்து திரும்பிய 2,500 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நடுவழியில் சிக்கிக் கொண்டவர்களை எல்லை சாலைகள் அமைப்பினர் மீட்டு வருகின்றனர்.
உத்தரகண்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் அதேவேளையில் பத்ரிநாத்தில் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளதால் நந்தகினி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
மேலும், அடுத்த சில நாள்களுக்கு மிககனமழை தொடரும் எனத் தெரிவித்துள்ள வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...