ஒரே நேரத்தில் 2 தவணை கோவிஷீல்டு செலுத்தப்பட்ட மங்களூரு இளைஞர்

தடுப்பூசி செலுத்தும் முகாமுக்குச் சென்ற 19 வயது கூலித் தொழிலாளிக்கு ஒரு நிமிடத்துக்குள் இரண்டு தவணை கோவிஷீல்டு மருந்துகளும் செலுத்தப்பட்டுள்ளது. 
ஒரே நேரத்தில் 2 தவணை கோவிஷீல்டு செலுத்தப்பட்ட மங்களூரு இளைஞர்
ஒரே நேரத்தில் 2 தவணை கோவிஷீல்டு செலுத்தப்பட்ட மங்களூரு இளைஞர்


இன்னுமா இப்படி நடக்கிறது என்று கேட்டால்? ஆம் என்றுதான் சொல்ல முடியும். கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டத்தில், தடுப்பூசி செலுத்தும் முகாமுக்குச் சென்ற 19 வயது கூலித் தொழிலாளிக்கு ஒரு நிமிடத்துக்குள் இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர்.

புதன்கிழமை மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்றைய தினம் தக்கலட்கா கிராமத்தில் நடந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏராளமானோர் கூடினர். இந்த கூட்ட நெரிசலில், கே.பி. அருண் என்ற இளைஞர் முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டபிறகு அந்த அறையிலேயே காத்திருந்த நிலையில், அங்கு பணியில் இருந்த சுகாதாரப் பணியாளர், தான் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியவருக்கே மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்துகிறோம் என்பதை அறியாமல், மீண்டும் தடுப்பூசி போட்டுள்ளார்.

பிறகுதான் தனது தவறை உணர்ந்து. சில மணி நேரங்கள் அவரை அங்கேயே இருக்கச் செய்து அவரது உடல்நலனில் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கவனித்துள்ளார்.

அவரை வீட்டுக்கு அனுப்பிய பிறகும், சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கேச் சென்று அவரது உடல்நிலையை பரிசோதித்து வந்தனர். அவருக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட அருண், அந்த அறையிலேயே இருந்ததால்தான் இந்த தவறு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com