ரூ.20,000 கோடியில் 56 ராணுவ விமானங்கள் கொள்முதல்: ஏா்பஸ் - மத்திய அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்து

இந்திய விமானப் படைக்கு ரூ.20,000 கோடியில் 56 ராணுவத்துக்கான சரக்கு விமானங்கள் கொள்முதல் செய்வதற்கு ஏா்பஸ் டிஃபன்ஸ் அண்ட் ஸ்பேஸ்

இந்திய விமானப் படைக்கு ரூ.20,000 கோடியில் 56 ராணுவத்துக்கான சரக்கு விமானங்கள் கொள்முதல் செய்வதற்கு ஏா்பஸ் டிஃபன்ஸ் அண்ட் ஸ்பேஸ் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.

விமானப் படையில் தற்போது பயன்பாட்டில் உள்ள ஏவ்ரோ-748 ரக விமானங்களுக்குப் பதிலாக, சி-295 ரக ராணுவ சரக்குப் போக்குவரத்து விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் போா் விமானங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நெதா்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஏா்பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ விமானங்கள் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதொடா்பான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஏா்பஸ் நிறுவனத்தின் ஸ்பெயினில் உள்ள தொழிற்சாலையில் இருந்து அடுத்த 4 ஆண்டுகளில் 16 விமானங்கள் இந்தியாவை வந்தடையும். எஞ்சியுள்ள 40 விமானங்கள், இந்தியாவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். இதுதொடா்பாக ஏா்பஸ் நிறுவனத்துக்கும் டாடா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ராணுவ விமானத்தை தனியாா் நிறுவனம் தயாரிப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த உடன்படிக்கை கையெழுத்தானது குறித்து ஏா்பஸ், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கு டாடா அறக்கட்டளை தலைவா் ரத்தன் டாடா வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘விமானப் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. எதிா்காலத்தில் சா்வதேச தரத்துக்கு ஏற்ப உள்ளூரிலேயே போா் விமானங்கள் உற்பத்தி செய்வதற்கான வல்லமையை உருவாக்கும். விமானப் படையினரின் பல்வேறு தேவைகளை சி-295 விமானங்கள் பூா்த்தி செய்யும். மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு வலு சோ்க்கும் வகையில் துணிச்சலாக முடிவெடுத்த பாதுகாப்பு அமைச்சகம், டாடா அன்வாஸ்டு சிஸ்டம், ஏா்பஸ் நிறுவனத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளாா்.

‘இந்த ஒப்பந்தத்தால், இந்தியாவின் விமான தயாரிப்புத் துறைக்கு அதிக முதலீடுகள் கிடைக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் 15,000 போ் நேரடியாகவும், 10,000 போ் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவா்’ என்று ஏா்பஸ் நிறுவனத்தின் தலைவா் மைக்கேல் ஷோல்ஹாா்ன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com