பாரத் பந்த்: விவசாயிகள் சாலை மறியல்; தில்லி எல்லைகளில் போக்குவரத்து பாதிப்பு

தில்லியில் தேசிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
பாரத் பந்த்: விவசாயிகள் சாலை மறியல்; தில்லி எல்லைகளில் போக்குவரத்து பாதிப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் (பாரத் பந்த்) நடைபெற்று வருகிறது. தில்லியில் தேசிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 27- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தில்லி எல்லைகள், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட இந்நாளில் நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. அதன்படி, இன்று நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 

தில்லி பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தில்லி எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தில்லி-மீரட் சாலை, உத்தரப் பிரதேசம்- காசிபூர் சாலை, தில்லி-பஞ்சாப், தில்லி-ஹரியாணா தில்லி-அமிர்தசரஸ் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் மாற்றுவழிகளில் வாகனங்கள் செல்வதற்கான பணிகளில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

திக்ரி எல்லையில் விவசாயிகள் பகாதுர்கர்க் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தில்லி, அம்பாலா, பிரோஸ்பூர் ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. அம்பாலா, பிரோஸ்பூர் வழி செல்லும் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

ஜந்தர் மந்தரில் மாபெரும் பேரணியும் இன்று காலை நடைபெற இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்கள், விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com