விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு: இன்று தீர்ப்பு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விவகாரத்தில் உடனடிக் கவனம் செலுத்தும் தேவை உள்ளது. மேலும், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தால் (என்டிஎஸ்ஏ) எடுக்கப்பட வேண்டிய

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 11:04 pm

 நமது நிருபர்


புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விவகாரத்தில் உடனடிக் கவனம் செலுத்தும் தேவை உள்ளது. மேலும், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தால் (என்டிஎஸ்ஏ) எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேற்பார்வைக் குழு, அணைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பலப்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக, கேரள மாநிலங்களின் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் சேகர் நாப்டே, ஜெய்தீப் குப்தா ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். அப்போது, நீதிபதிகள் அமர்வு, "இன்றைக்கு தற்போதைய முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. அதற்கு தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆணையம் உள்ளது. ஆனால், அது இன்னும் அமைக்கப்படவில்லை' என்றது.

கேரள அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா, "மேற்பார்வைக் குழுவே தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் என்ற நீதிமன்றத்தின் பரிந்துரையில் எங்களுக்கு எந்தவித சிரஹமமும் இல்லை. அது காலக்கெடுவுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும். மேலும், கேரள அரசின் தரப்பில் சில முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. அதாவது, மேற்பார்வைக் குழுவின் தலைவரை மாற்றி, ஒரு மூத்த அதிகாரி தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என அரசு பரிந்துரைத்துள்ளது' என்றார்.

தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே, "உச்சநீதிமன்றம் கடந்த 2006, 2014-ஆம் ஆண்டு தீர்ப்புகளில் அனுமதித்துள்ள நடவடிக்கைகளைச் செயல்படுத்தவிடாமல் இடையூறு ஏற்பட்டுள்ளது' என்றார். அப்போது நீதிபதிகள் அமர்வு, "நமது கவனம் மேற்பார்வைக் குழுவை வலுப்படுத்துவதில் இருக்க வேண்டும். அனைத்து செயல்பாடுகளும் அதிகாரங்களும் மேற்பார்வைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அணையின் வரலாறு மற்றும் கடந்த காலங்களுக்குச் செல்லாமல் அணையின் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும்' என்றது. 

மத்திய நீர் ஆணையம், மேற்பார்வைக் குழுவின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டியிடம், மேற்பார்வைக் குழுவின் தலைவரை மாற்றுவது தொடர்பான கேரளத்தின் முன்மொழிவு குறித்து நீதிபதிகள் அமர்வு கேள்வி கேட்டது. அப்போது அவர் கூறுகையில், "இதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்கெனவே முன்மொழிவு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதைய தலைவரே நீடிப்பதற்கு நீதிமன்றம் அனுமதிக்கலாம்' என்றார். "அப்படியானால் நாங்கள் மேற்பார்வைக் குழுவை தொந்தரவு செய்ய மாட்டோம். இந்த ஏற்பாடு 2014-இல் இருந்து வருகிறது' என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
அப்போது, கேரளத்தின் தரப்பில், "மேற்பார்வைக் குழுவின் தலைவராக மூத்த நபர் இருக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் அமர்வு, "புதிய குழுவை அமைக்கலாம். ஆனால் அது புதிய சூழலை பழகுவதற்கு சிறிது காலமாகும். இந்த விஷயத்தில் அறைகுறையாகச் செயல்படக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குழுவைப் பற்றிய உங்கள் கருத்தை விட அணையின் பாதுகாப்புதான் முக்கியமானது. பாதுகாப்பு என்பது மேற்பார்வைக் குழுவின் முழு உரிமையாகும். புதிய அணை குறித்த கேள்விக்கு நீதிமன்றம் தற்போதைக்கு செல்லாது' என்று கூறியது.
விசாரணையின் போது மனுதாரர்களில் ஒருவர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அணைக்கு ஏற்படப்போகும் பேரிடரை இந்தச் சட்டம் தடுக்கப் போவதில்லை' என்று கூறி 2014-ஆம் ஆண்டைய உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது, நீதிபதிகள் அமர்வு, "உங்களுக்கு தரப்பட்ட அனுமதியை மீற வேண்டாம்' என கூறியது.
அதன் பின்னர், இந்த விவகாரம் தொடர்பான உத்தரவு வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.